ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரிப்பு: இயற்கை வேளாண் மாவட்டமாக மாறுமா நீலகிரி?


கிண்ணக்கொரை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அங்கத்தினருக்கு வழங்கப்படும் யூரியா உரங்கள்.

உதகை: மலை மாவட்டமான நீலகிரியில் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே தேயிலை, காபி, ரப்பர் போன்ற பணப் பயிர்களும் கேரட்,பீட்ரூட், டர்னிப், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட ஏராளமான மலைக் காய்கறிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆங்கிலேயர்களிடமிருந்து விவசாய முறையைக் கற்றுக்கொண்டு, இந்த விவசாயத்தில் நீலகிரியில் வாழும் மக்கள் இன்றளவும் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக தேயிலையும், மலைக் காய்கறி பயிர்களும் விளங்குகின்றன.

தற்போது, நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை விவசாயமும், 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மலைக் காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மற்ற காய்கறிகளைவிட, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை மற்றும் மலைக் காய்கறிகளுக்கு அதிக அளவிலான ரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிக மகசூல் கிடைக்கும் என கருதி, விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் ரசாயன உரங்களை கொட்டி, அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் மகசூல் மருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவரும் இந்த ரசாயன உரம் மற்றும் மருந்துகளால், மனிதர்களுக்கு தீராத நோய்கள் ஏற்படுவதோடு சுற்றுச்சூழலிலும் பெரிய அளவு சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது என, சூழலியல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக வேளாண் வேதியியல் பொருட்கள் எனப்படும் ரசாயன மருந்துகளிலுள்ள சிவப்பு, மஞ்சள் முக்கோண குறியீடுகளைக் கொண்ட மருந்து வகைகளுக்குத் தடை விதிக்கும் முயற்சியில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

கடந்தாண்டு நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு பட்ஜெட்டில் ரூ.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. மேலும், இயற்கை வேளாண் மாவட்டமாக நீலகிரி 2030-ம் ஆண்டுக்குள் மாற்றப்படும் எனவும் அறிவித்தது.

நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை திட்டங்களுக்காக ரூ.10 கோடிக்கான அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளதாக, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை பெருமளவு ஊக்குவித்து காற்று, நீர், மண் மாசுபடாமல் நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கில், கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

5 ஆண்டுகளில் செயல்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு ரூ.2.16 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காய்கறி பயிர்களில் அங்கக வேளாண்மை 250 ஹெக்டர் பரப்பிலும், சிறுதானிய பயிர்களில் அங்கக வேளாண்மை 100 ஹெக்டர் பரப்பிலும், வாசனை திரவிய பயிர்கள் 125 ஹெக்டர் பரப்பிலும், தேயிலை தோட்டத்தில் பழப்பயிர்கள் சாகுபடிக்கு 200 ஹெக்டர் பரப்பிலும் மேற்கொள்ளப்படவுள்ளது. அங்கக வேளாண்மை திட்டங்களுக்காக, இந்த ஆண்டு ரூ.10 கோடிக்கான அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், கிண்ணக்கொரை பகுதியில் இயற்கை வேளாண்மைக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அந்த நோக்கமே நீர்த்துபோகும் வகையில் அங்குள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, தனது அங்கத்தினருக்கு ரசாயன உரங்களை வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அங்கத்தினர்கள் கூறும்போது, “இயற்கை வேளாண் மாவட்டமாக நீலகிரியை மாற்ற அரசு முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க கிண்ணக்கொரையில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை மூலமாக, இயற்கை வேளாண் கிராமத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது அந்த நோக்கமே முழுமையாக சிதையும் வகையில் இயற்கை மற்றும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, அனைத்து சிறு தேயிலை விவசாயிகளின் தேயிலைத் தோட்டங்களிலும் யூரியா அடிப்படையிலான ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர்” என்றனர்.