பழநியில் இடிந்து விழும் அபாயத்தில் தொகுப்பு வீடுகள்: அச்சத்தில் பழங்குடி மக்கள்


பழநி அருகே புளியம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழங்குடி மக்களின் தொகுப்பு வீடுகள்.

பழநி: பழநி அருகே புளியம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு, புதிய வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழநியை அடுத்த பெரியம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது புளியம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் 32 பழங்குடியின குடும்பங்களுக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. இந்த வீடுகள் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் போதிய பராமரிப்பின்றி உள்ளது. தற்போது வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இதனால் மழைக் காலங்களில் வீடுகளில் மழைநீர் உள்ளே செல்வதை தடுக்க மேற்கூரையை பிளாஸ்டிக் கவர், பனை மற்றும் தென்னை ஓலைகளை கட்டிவைத்து பாதுகாத்து வருகின்றனர். சிலர் அச்சத்தில் வெளியேறி அருகிலுள்ள காலி இடத்தில் குடிசை அமைத்து வசிக்கின்றனர். இது குறித்து தொகுப்பு வீட்டில் வசிக்கும் காளியப்பன் கூறியதாவது: தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதில் இருந்து ஒரே ஒருமுறை மட்டுமே அரசு சார்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு தற்போது வரை சீரமைப்பு பணி மேற்கொள்ளவில்லை. அதனால், வீடுகளின் மேற்கூரைகள், சுவர்கள் வலுவிழந்து எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழைக் காலம் மற்றும் இரவில் அச்சத்துடன் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேற்கூரை, ஓடுகள் சேதமடைந்துள்ளதால் மழைநீர் வீட்டுக்குள் வருவதை தடுக்க பிளாஸ்டிக் கவரால் வீட்டை பாதுகாத்து வருகிறோம். வீடுகளை சீரமைக்கக் கோரி பல முறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காளியப்பன்

இங்குள்ள மக்கள் தேன், கிழங்கு எடுத்தல், தோட்ட வேலைக்கு செல்வது, கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய வருவானம் இல்லாதால் தாங்களாகவே வீட்டை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளை இடித்து அகற்றிவிட்டு புதிய வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும்.

மேலும், இப்பகுதி வனப்பகுதியையொட்டி உள்ள மலையடிவாரம் என்பதால் இரவில் காட்டுப்பன்றிகள், யானைகள் நடமாட்டம் உள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் இரவில் இயற்கை உபாதையை கழிக்க அச்சத்துடன் வெளியே செல்லும் நிலை உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள் சிரமப்படுகின்றனர்" என்று கூறினார்.