18-வது மக்களவையில் 80% எம்.பி.க்கள் பட்டதாரிகள்!


புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18-வது மக்களவையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களில் ஒருவர் கூட எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது முறையான படிப்பறிவு இல்லாத வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முந்தைய போக்கிலிருந்து மாறுபட்டுள்ளது. அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரட்டிக் ரிஃபார்ம்ஸ் (ஏடிஆர்) என்ற அமைப்பின் கருத்துப்படி, இந்த 2024 மக்களவைத் தேர்தலில் படிப்பறிவில்லாதவர்கள் என்று தெரிவித்திருந்த 121 வேட்பாளர்களில் யாரும் வெற்றி பெறவில்லை.

18-வது மக்களவை எம்.பி.க்களின் கல்வி விபரம்: மக்களவைக்குக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 எம்.பி.க்களில் பெரும்பாலானவர்கள் உயர் கல்வி பெற்றவர்களே. ஒரே ஒரு எம்பியைத் தவிர மீதமுள்ள எம்.பி.க்கள் பல்வேறு பட்டப்படிப்புகள் படித்துள்ளனர். இது தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரையிலான பரவலின் அளவீடுகளைக் காட்டுகிறது. ஏடிஆர் அறிக்கையின் படி, வெற்றி பெற்றுள்ள மக்களவை உறுப்பினர்களில் 105 பேர் அல்லது 19 சதவீதத்தினர் 5 முதல் 12 வகுப்பு வரையில் படித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையை இந்தப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும், வேட்பாளர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்ற வாக்களிர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்கிறது.

கட்சி ரீதியாக கல்வித் தகுதி: 18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் கல்வித் தகுதி சில சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த மக்களவையில் அதிகமான உறுப்பினர்களைத் கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. இக்கட்சியின் 240 வேட்பாளர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கணிசமான அளவில் 64 பட்டதாரி உறுப்பினர்களும், 49 முதுநிலை பட்டதாரிகளும் உள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி 99 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் கட்சியிலும் கணிசமான எம்.பி.க்கள் உயர் கல்வியை உடையவர்களாக இருக்கும் போக்கே காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் 24 பேர் பட்டதாரிகள், 27 பேர் முதுநிலை பட்டதாரிகள், 21 பேர் தொழில்முறை பட்டப்படிப்பு பெற்றுள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ஒருவர் மட்டுமே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர்களில் குறைந்த கல்வித் தகுதி கொண்டவராக தனித்து நிற்கிறார்.

பள்ளிக் கல்வி பெற்றவர்கள்: கல்வித் தகுதியை இன்னும் பகுத்துப் பார்த்தால், மொத்த உறுப்பினர்களில் 105 பேர், 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வித் தகுதி கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்தப் பட்டியலிலும் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது. அக்கட்சியின் 40 எம்.பி.க்கள் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றனர். காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அக்கட்சியின் 19 எம்.பி.க்கள் இந்தப் பிரிவில் உள்ளனர்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம், காங்கிரஸ் கட்சியில் எந்த உறுப்பினரும் 10-ம் வகுப்புக்கு குறைவான கல்வித் தகுதி கொண்டவர்களாக இல்லை. இந்தப் பிரிவில் 6 எம்.பி.க்களுடன் சமாஜ்வாதி கட்சியும், 4 உறுப்பினர்களுடன் திராவிட முன்னேற்ற கழகமும் இடம்பிடித்துள்ளது.

உயர் கல்வியைப் பொறுத்தவரையில் 147 எம்.பி.க்கள் இளநிலை பட்டம் பெற்றுள்ளனர். மேலும், 147 எம்.பி.க்கள் முதுநிலை பட்டம் பெற்றுள்ளனர். இந்தப் பிரிவிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகிறது. இது நன்றாக படித்தவர்களின் வலுவான இருப்பினை பிரதிபலிக்கிறது. கூடுதலாக, 98 எம்.பி.,கள் தொழில்முறை பட்டப்படிப்பு, பட்டையப்படிப்பு படித்துள்ளனர். இது நாடாளுமன்றத்தில் உள்ள கல்வி பன்முகத்தன்மையினை மேலும் வலியுறுத்துகிறது.

கல்லூரி சென்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 1-வது மக்களவையில் இருந்து 11-வது மக்களவை (1996 -98) வரை இளநிலை பட்டம் பெற்ற எம்பிக்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வந்தது. அதற்கு பின்னர் கல்லூரி படிப்பினை முடிக்காதவர் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த நிலையில், இந்த எண்ணிக்கை 17-வது மக்களவையில் 27 சதவீதமாகவும், தற்போதையை 18-வது மக்களவையில் 22 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இந்தப் புதிய மக்களவையில் 78 சதவீத எம்.பி.க்கள் குறைந்தது இளநிலை பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். இந்த விகிதாச்சாரம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்களுக்கும் பொருந்தும். அதேபோல், 18-வது மக்களவையில் 5 சதவீத எம்.பி.க்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.