தமிழகத்தில் கட்சிகளின் ‘செல்வாக்கு’ காட்டும் வாக்கு சதவீதம் - முந்துவதும் மோதுவதும் யார் யார்?


தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கழகங்களும் வாக்கு சதவீதத்தை சற்றே இழந்திருக்க, விக்கிரமாதித்யன் - வேதாளம் போல தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வந்த சில கட்சிகளின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதுடன், மாநில கட்சிக்கான அங்கீகார, அந்தஸ்தைப் பெற்று பெரும் பாய்ச்சலைக் காட்டியிருக்கின்றன. 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழக கட்சிகளின் வாக்கு சதவீத கணக்கு செல்வாக்கு, அடுத்து வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் யார் முந்துவார்கள், யார் தீவிரமாக மோதுவார்கள் என்பதற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு விகிதங்கள்: தமிழகத்தின் 39, புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இந்தத் தேர்தலில், திமுக தலைமையில் இண்டியா கூட்டணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டன. இந்தத் தேர்தலின் முடிவில் திமுக - 26.93%, அதிமுக - 20.46%, பாஜக - 11.24%, நாம் தமிழர் - 8.19%, காங்கிரஸ் - 10.67%, பாமக - 4.4%, தேமுதிக - 2.59%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2.15%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2.5% வாக்குகள் பெற்றிருக்கின்றன.

திமுகவின் சாதனையும் சறுக்கலும்: திராவிட மாடல் ஆட்சி முழுக்கத்துடன் தமிழகத்தில் மக்களவைச் தேர்தலைச் சந்தித்தது திமுக தலைமையிலான கூட்டணி. இந்த மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே கணிக்கப்பட்டது போல தென்மாவட்டங்களில் பாஜகவின் வீச்சு அதிகரித்திருக்க, தமிழகத்தில் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறது திமுக. தமிழகத்தில் திமுக சராசரியாக 36 - 37 இடங்களில் வெல்லலாம் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூற, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றி, முழுமையான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது திமுக கூட்டணி.

அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த தேர்தலில் 8 கட்சிகளுடன் களம் கண்ட திமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 46.97. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் 8 கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த திமுக கூட்டணி 38 இடங்களைக் கைப்பற்றி 53 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. கூட்டணி அளவில் மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 33.53 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் 26.93 சதவீதம் வாக்குகளையேப் பெற்றுள்ளது.

அதிமுக செல்வாக்கை இழக்கிறதா? - தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது பொன்விழாவை நிறைவு செய்தது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி என்ற பெருமையை பெற்றது. அந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அதில் 37 தொகுதிகளை வென்றது. அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 44.34.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் 2019 மக்களவைத் தேர்தலை அதிமுக எதிர்கொண்டு 22 தொகுதிகளில் போட்டியிட்டது. அத்தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார். மற்ற 21 இடங்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 35.20.

2024 மக்களவை தேர்தலில் பழனிசாமி என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக தேர்தலை எதிர்கொண்டது 34 இடங்களில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 20.46 ஆக குறைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பிரதான கட்சியான அதிமுக வேட்பாளர்கள் தென்சென்னை, வேலூர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர். 24 இடங்களில் 2-ம் இடத்தை பிடித்துள்ள அக்கட்சி, 10 இடங்களில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டைப்போல அதிமுக உறுப்பினர் இல்லாத மக்களவையாக இந்த மக்களவை அமைய இருக்கிறது.

தேய்பிறையாகும் தேமுதிக: கட்சித் தொடங்கியதும் நடைபெற்ற தேர்தலில் சுமார் 8.4 சதவீத வாக்குகள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய தேமுதிக, விஜயகாந்த மறைவுக்குப் பின் நடந்த இந்தத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர் (தனி), வடசென்னை ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் அக்கட்சி தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், வடசென்னை ஆகிய தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இதில் விருதுநகரில் மட்டும் தேமுதிகவின் விஜய பிரபாகரன் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு இறுதி வரை கடுமையான சவலாக விளங்கினார். தற்போதைய தேர்தலில் தேமுதிக தான் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் சேர்த்து 2.59% வாக்குகளைப் பெற்றுள்ளது. இது சமீபத்திய தேர்தல்களைவிட அதிகமாகும் என்பதே அக்கட்சிக்கான ஆறுதல்.

வாக்கு வங்கியை தக்கவைத்த பாமக: தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது. தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி கடைசி வரை திமுக வேட்பாளருக்கு சாவல் கொடுத்துவந்தார்.

இந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மொத்தமாக 4.30 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 3.8 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. தொடக்கத்தில் இருந்தே வடதமிழகத்தில் 4 முதல் 5.5 சதவீத வாக்குகளை தக்கவைத்து வரும் பாமக, இந்த தேர்தலிலும் தனது வாக்கு சதவீதத்தை தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அங்கீகாரம் பெற்ற நாதக, விசிக: கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக தேர்தல் அரசியலில் பங்கெடுத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்போது, தமாகா உடனான கூட்டணியில் பெரம்பலூரில் 1 லட்சம், சிதம்பரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திருமாவளவன் உருவெடுத்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் மற்றும் பானை சின்னத்தில் விசிக போட்டியிட்டது. வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டதால் இரு தொகுதிகளையும் வென்ற நிலையிலும் அக்கட்சிக்கு மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 1.03 லட்சம் வாக்குகள் மற்றும் விழுப்புரம் தொகுதியில் துரை. ரவிக்குமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இருதொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிட்டு விசிக வேட்பாளர்கள் வென்றதன், அடிப்படையில், விசிகவுக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

அதேநேரம், 8 சதவீத வாக்குகளுடன் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை நாம் தமிழர் கட்சியும் பெறவிருக்கிறது. தொடக்கம் முதலே அக்கட்சி கூட்டணியின்றி தேர்தலைச் சந்தித்து வருகிறது. ஆனால், கடந்த தேர்தலில் அவர்களுக்கு பெரிதும் கை கொடுத்த கரும்பு விவசாயி சின்னம், இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இருப்பினும் மைக் சின்னத்தில் அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற 3.90 வாக்கு சதவீதத்தை போல இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதாவது 8.16 சதவீதம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது. 8 சதவீத வாக்குகள் பெற்றிருப்பதன் அடிப்படையில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை நாதக பெறவிருக்கிறது.

வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக: தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் முழங்கி வந்தார். அந்தத் தேர்தலில் அக்கட்சி 3.62 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. 2014-ல் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 5.56 ஆக இருந்தது.

வெற்றி என்பதைத் தாண்டி வாக்கு வங்கி என்ற அளவில் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது என்றால் அது மிகையில்லை. இந்த தேர்தலில் பாஜக 11.24 சதவீதம் வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது.

ஏறி இறங்கும் காங்கிரஸ் க்ராஃப்: 2014-ல் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸின் வாக்கு சதவீதம் 4.37 ஆக இருந்தது. அதுவே 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் 12.72 சதவீதமாகவும், தற்போது நடந்து முடிந்த 2024 தேர்தலில் 10.67 சதவீதமாகவும் உள்ளது.