மருந்துகளை விரைந்து கொண்டு செல்ல பிரத்யேக ட்ரோன்: தஞ்சாவூர் பொறியாளர் வடிவமைப்பு


அவசர சிகிச்சைக்காக மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், உடல் உறுப்புகளை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரோனுடன் தஞ்சாவூர் பொறியாளர் தினேஷ் பாலுராஜ். படம்: ஆர்.வெங்கடேஷ்.

தஞ்சாவூர்: அவசர சிகிச்சைக்காக மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகளையும் விரைந்து கொண்டு செல்லும் வகையில் பிரத்யேக ட்ரோனை தஞ்சாவூரைச் சேர்ந்த பொறியாளர் வடிவமைத்துள்ளார். இந்த ட்ரோன் தமிழக அரசின் அனுமதி கோரி காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை கூட்டுறவு ஸ்ரீநகர் கோ-ஆபரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் தினேஷ் பாலுராஜ் (33). பொறியியல் பட்டதாரியான இவர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில், அவசர சிகிச்சைக்காக மருந்துப் பொருட்களை கொண்டு செல்லும் ட்ரோன்களை வடிவமைக்கும் நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். சொந்த ஊரிலும் இது போன்ற ட்ரோன்களை வடிவமைத்து வழங்குவதற்காக, வெளிநாட்டு வேலையை விட்டு விட்டு 2022-ம் ஆண்டு தஞ்சாவூர் வந்தார்.

அதன்பின், அவசர சிகிச்சைக்காக வெளியூர்களுக்கு மருந்துப் பொருட்களையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உடல் உறுப்புகளையும் விரைந்து கொண்டு செல்லும் வகையில் ட்ரோனை வடிவமைத்துள்ளார். இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக தினேஷ் பாலுராஜ் தெரிவித்தார்.

இது குறித்து தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தொலைதூர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருந்துப் பொருட்களையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான உடல் உறுப்புகளையும் விரைந்து கொண்டு செல்லும் வகையில் இந்த ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு அண்மையில் பார்வையிட்டு, தனது நிறுவனத்தின் சார்பில் ட்ரோன்களை வடிவமைக்க முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த ட்ரோன் 400 மீட்டர் உயரத்தில் மணிக்கு 150 கி.மீ. வேகம் வரை செல்லும்.

7 கிலோ வரை உள்ள மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதன் எடை25 கிலோ. தொடர்ச்சியாக 1 மணி நேரம் பறந்து செல்ல முடியும். இது வான்வெளியில் பறக்க தடையின்மை சான்று பெற்றுள்ளேன். தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, எனது ட்ரோனை காட்சிப் படுத்தி, இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி கேட்டேன். தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.