அடர்ந்த புதர் பகுதியாக காட்சியளிக்கும் பாரதியார் பல்கலைக்கழக வளாகம்!


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறம் வனப்பகுதியை ஒட்டியுள்ள புதர் மண்டிய பகுதிகள். படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. யானை வழித்தடத்தை மறித்து கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்தும், மனித-விலங்கு மோதல் அதிகரித்திருப்பது குறித்தும் இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை கண்காணிக்க சென்ற காவலாளி ஒருவர் யானை துரத்தியதில் கீழே விழுந்து உயிரிழந்தார்.

பாரதியார் பல்கலைக்கழகம் வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் புதர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை வனச்சரகர் திருமுருகன் கூறும்போது, “பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறம் செடி, கொடி, மரங்கள் அடர்ந்த பகுதியாக உள்ளது. வனத்தை விட்டு வெளியேறும் யானை, மான் உள்ளிட்டவை அடர்ந்த புதர் பகுதிக்கு வந்து செல்கின்றன. புதர்களை அகற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

இதன் மூலம் யானை உள்ளிட்ட வன விலங்கு நடமாட்டத்தை எளிதாகக் கண்டறிய முடியும். அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்டறிய பரிந்துரைகளை வழங்க உள்ளோம்” என்றார்.

ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறும்போது, “மருதமலை அடிவாரப் பகுதி காலம் காலமாக யானைகள் வலசை செல்லும் பகுதியாகும். அப்பகுதி யானை பள்ளமாக அறியப்படுகிறது. யானைகள் மறைவான இடத்தில் தான் நிற்கும். எனவே, பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் இடைவெளியில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

மேலும் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உயர்கல்வி நிறுவனமான பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களுக்கு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

பாரதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறும்போது, “புதர்களை அகற்றுவதில் மாற்றுக்கருத்து இல்லை. இதுகுறித்து, உயர்கல்வித்துறை செயலருக்கு தெரிவித்துள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் நலன் கருதி புதர் பகுதிகளை அகற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார். விரைவில் புதர்களை அகற்றும் பணி தொடங்கும்” என்றனர்.

x