சிறு, குறு தொழில் வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது மாநிலத்துக்கான ‘ஜிஎஸ்டி’ வருவாய் குறைவு


கோவை: மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) மூலம் தமிழக அரசுக்கு கடந்த நிதியாண்டு கிடைத்துள்ள வருவாயின் வளர்ச்சி அதற்கு முந்தைய நிதியாண்டை விட 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இது ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறை வீழ்ச்சியை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின், தேசிய தலைவர் கே.இ.ரகுநாதன் கூறும்போது, “எஸ்ஜிஎஸ்டி மூலம் தமிழக அரசுக்கு 2024 நிதியாண்டில் ரூ.41 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனினும் 2023 நிதியாண்டுடன் (23.5 சதவீதம்) ஒப்பிடுகையில் தற்போது வளர்ச்சி 13 சதவீதமாக குறைந்துள்ளது மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதை பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக எம்எஸ்எம்இ தொழில்கள் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “தமிழகத்தில் 0 -50 கிலோவாட் பிரிவில் உள்ள தாழ்வழுத்த மின்நுகர்வோர் (எல்டிசிடி) எண்ணிக்கை 2,68,039 (85 சதவீதம்), 50 முதல் 100 கிலோவாட் வரையிலானபிரிவில் உள்ள தொழில் நிறுவனத்தினர் 20,475 (7 சதவீதம்), 100 முதல் 112 கிலோவாட் வரையிலான தொழில் பிரிவினர் 24,351 (8 சதவீதம்),112 கிலோவாட்டுக்கு மேல் பிரிவில்778 தொழில் நிறுவனங்கள் (0.25 சதவீதம்) உள்ளன.

தமிழகத்தில்அதிக மின் கட்டணம் காரணமாக போட்டி மாநிலங்களாக திகழும் குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது. மூலப்பொருட்களை தமிழகத்துக்கு கொண்டு வரவும்,மீண்டும் முழுமையாக தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவிற்கு மிகஅதிக நிதி ஒதுக்க வேண்டியுள்ளது.

இதேபோல், மின் கட்டண உயர்வு அதிகமாக உள்ளது. இதனால் உற்பத்தி செலவு மிக அதிகமாகிதொழில்துறையினர் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 24 மணி நேரம்இயங்கிய நிறுவனங்களில் தற்போது எத்தனை நிறுவனங்கள் அவ்வாறு செயல்படுகின்றன என்பதை தமிழக அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்தால் உண்மை நிலை தெரிந்துவிடும்” என்றார்.

‘டாக்ட்’ மாவட்ட தலைவர் ஜேம்ஸ் மற்றும் ‘கொசிமா’ முன்னாள் தலைவர் சுருளிவேல் ஆகியோர் கூறும்போது, “உற்பத்தி துறையில் நெருக்கடி தொடர்கிறது. எஸ்ஜிஎஸ்டி வருவாயில் வளர்ச்சி 10 சதவீதம் குறைந்துள்ளது எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களின் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

மூலப்பொருட்கள் விலை மற்றும் மின்கட்டண உயர்வை குறைப்பது, தமிழக அரசுத்துறைகளின் கொள்முதலில் 25 சதவீதம் கண்டிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைபடுத்துவது உள்ளிட்டவை எம்எஸ்எம்இ தொழில்துறை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப உதவும். இதன் மூலம் தமிழக அரசுக்கு எதிர்வரும் ஆண்டுகளில் எஸ்ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாயின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்” என்றனர்.

கூடுதல் வருவாய் பெற்ற மாநிலங்கள்: ‘எஸ்ஜிஎஸ்டி’ வருவாயில் 2023 நிதியாண்டை விட 2024 நிதியாண்டில் சில மாநிலங்கள் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. உத்தரபிரதேசம் 15.1 சதவீதத்திலிருந்து 18.9 சதவீதம், ஒடிசா 11.5 சதவீதத்தில் இருந்து 15.8 சதவீதம், தெலங்கானா 15.6-லிருந்து 18.6 சதவீதம், மத்திய பிரதேசம் 15.9-லிருந்து 19.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.