‘ரென்ட்’ முறையில் ஓடிடியில் அஜய் தேவ்கனின் ‘மைதான்’ வெளியீடு


சென்னை: அஜய் தேவ்கன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘மைதான்’ இந்தி திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. ஆனால் ‘ரென்ட்’ முறையில் தனிக்கட்டணம் செலுத்தி தான் அந்தப் படத்தை பார்க்க முடியும்.

இந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அமித் ஷர்மா. இவர் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள புதிய படம் ‘மைதான்’. ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

கால்பந்து விளையாட்டை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் பிரியாமணி, கஜராஜ் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஃபுட்பால் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது.

படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. ஆனால் இந்தப் படத்தை வழக்கமான அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் பார்க்க முடியாது. தனிக்கட்டணம் செலுத்தி பார்க்கலாம். ஜூன் மாதம் இப்படம் ‘ரென்ட்’ இல்லாமல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.