ஐ நேச்சுரலிஸ்ட் செயலி மூலம் 1,210 வகை வன உயிரினங்கள் பதிவு


கோவை சிறுவாணி மலை பகுதியில் பதிவு செய்யப்பட்ட காட்டு பஞ்சுருட்டான்.

கோவை: கோவையில் ஐ நேச்சுரலிஸ்ட் செயலி மூலம் 1210 வகை வன உயிரினங்கள் பதிவு செய்யப்பட்டன.‘சிட்டி நேச்சர் சேலஞ்ச்’ என்பது உலகளாவிய ‘பயோபிளிட்ஸ்’ (குறிப்பிட்ட பகுதியில் தாவரங்கள், பூச்சிகள், வன உயிரினங்கள் உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்துவது) ஆகும்.

கோவையில் ஐ நேச்சுரலிஸ்ட் (iNaturalist) செயலியை பதிவிறக்கம் செய்து எறும்பு முதல் பூச்சி, தாவரங்கள், பறவைகள், வன உயிரினங்களை புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

சிட்டி பேர்ட் அட்லஸ், சித்தார்த் பவுண்டேஷன், உலக வன நிதியம், கோவை நேச்சர் சொசைட்டி, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி சங்கம், குமரகுரு மற்றும் கொங்குநாடு கல்வி நிலையங்கள், துருவம் பவுண்டேஷன், எர்த் பவுண்டேஷன், ஓசை உள்ளிட்ட அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் ‘பயோபிளிட்ஸ்’ நடைபெற்றது.

இதில் பொன்னூத்து, மருதமலை, கோவை குற்றாலம் ஆகிய இடங்களில் இயற்கை நடை, ஆனைகட்டியில் பறவைகளை காணுதல், சிங்காநல்லூர் குளத்தில் பட்டாம்பூச்சி காணுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. மக்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள்உள்ளிட்ட 87-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று 1210 வகை வன உயிரினங்களை ஐ நேச்சுரலிஸ்ட் செயலியில் பதிவேற்றம் செய்தனர்.

இதில் தீக்காக்கை, மலபார் காட்டுக்கீச்சான், காட்டு பஞ்சுருட்டான், நீலகிரி மந்தி, மலை அணில், குள்ளநரி, பலவகையான சிலந்திகள், பட்டாம்பூச்சிகள், அந்துப்பூச்சிகள், வண்டுகள், எறும்புகள், வேப்பமரம், ஆலமரம்,அரசமரம், புளியமரம், புங்கமரம், சந்தனமரம் உள்ளிட்ட 1210 வகை வன உயிரினங்கள் பதிவு செய்யப்பட்டன. சுமார் 5,000 வன உயிரினங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.