திற்பரப்பு அருவியில் 8 நாட்களுக்கு பின்பு குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் வேகம் குறைந்ததால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. 8 நாட்களுக்குப் பிறகு இன்று திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோடையில் வெளுத்து வாங்கிய வெயிலுக்கு இதமாக குளிரான தட்பவெப்பம் நிலவுகிறது. அத்துடன் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழையின் தீவிரம் இரு நாட்களாக குறைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் அதிகபட்ச மழை அளவாக முள்ளங்கினாவிளையில் 11 மிமீ. மழை பதிவானது.

தொடர்சியாக தினமும் விடிய விடிய பெய்த மழை பகலிலும் வெளுத்து வாங்கியதால் குமரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதித்தது. இந்நிலையில் தற்போது மேகமூட்டத்துடன் மிதமான தட்பவெப்பம் நிலவி வருகிறது. அவ்வபோது மட்டும் சாரலுடன் மிதமான மழை பெய்கிறது. மழையின் வேகம் குறைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கும் நீர்வரத்தும் குறைந்துள்ளது. அணைக்கு 625 கனஅடி மட்டுமே தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 44.97 அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. மதகு வழியாக மட்டும் விநாடிக்கு 636 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டுகிறது. இதைத்தொடர்ந்து 8 நாட்களுக்கு பின்னர் அருவியில் குளிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

x