பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்


பொள்ளாச்சியில் நடைபெற்ற மாட்டுசந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகள்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கால்நடை சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையாகின.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கால்நடை சந்தையான பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இன்று கூடிய சந்தையில், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதில் நாட்டு மாடுகள் அதிகளவு கொண்டு வரப்பட்டிருந்தன. மாடுகளை வாங்க 350-க்கும் அதிகமான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், அனைத்து வகை மாடுகளின் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. வழக்கமாக ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். இன்று ரூ.2 கோடிக்கு மேல்வர்த்தகம் நடைபெற்றது. பொள்ளாச்சி சந்தைக்கு வரும் பெரும்பாலான மாடுகள் கேரள மாநில வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: வாராத்தின் முதல் சந்தையான செவ்வாய்க்கிழமை சந்தைக்கு மாடுகளின் வரத்து குறைவாக இருந்தது. அதேநேரம் 350-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் அதிகாலை முதலே மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்றைய சந்தையில் 2000க்கும் அதிகமான மாடுகள் விற்பனைக்காக வந்திருந்தன.

அதில் நாட்டு பசு மாடுகள் ரூ.45 முதல் 40 ஆயிரத்துக்கும், காங்கேயம் காளை - ரூ.55 முதல் 60 ஆயிரத்துக்கும், நாட்டு எருமை ரூ.45 முதல் 50 ஆயிரத்துக்கும், முரா வகை ரூ.60 முதல் 65 ஆயிரத்துக்கும், ஜெர்ஸி பசு ரூ.30 முதல் 35 ஆயிரத்துக்கும், ஹெச்.எப். ரக பசு - ரூ.50 முதல் 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட கூடுதல் விலைக்கு கால் நடைகள் விற்பனை செய்யப்பட்டன. ஒட்டு மொத்தமாக ரூ.2 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெற்றது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.