வீட்டுக்கழிவறையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழப்பு @ புதுச்சேரி


புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் பாதாள சாக்கடையில் இருந்து கசிந்த விஷவாயு வீட்டின் கழிவறை வழியாக வெளியேறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பெண்கள் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியின் தெருக்களில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கசிந்து அது ஒரு வீட்டின் கழிவறைகள் வழியாக வெளியேறியுள்ளது. விஷவாயு தாக்கியதில், அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் சென்ற மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அவரைக் காப்பாற்றச் சென்ற மகளும் மயங்கி விழுந்துள்ளார். இதில் இருவருமே உயிரிழந்தனர். உயிரிழந்த மூதாட்டியின் பெயர் செந்தாமரை, அவருக்கு வயது 72. அவரைக் காப்பற்றச் சென்று உயிரிழந்த அவரின் மகள் பெயர் காமாட்சி என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரையும் காப்பாற்றச் சென்ற 15 வயது சிறுமியும் விஷவாயு தாக்கியதில் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெயர் பாக்கியலட்சுமி. விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பகுதியைச் சேர்ந்த செல்வராணி என்பவரும் விஷவாயு தாக்கி வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை, போலீஸார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் விஷவாயு தாக்கியதால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

ரெட்டியார்பாளையத்தில் காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வரும்போதே விஷவாயு தாக்கம் அப்பகுதி மக்களால் உணரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளியேற்றம்: உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து காவல்துறை அப்பகுதியில் வாழும் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியேற்றி வருகின்றனர். தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள் புதுநகர் பகுதியில் ஆய்வு நடத்தி, பாதாள சாக்கடையை திறந்து வருகின்றனர். விஷவாயுவின் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.