பணியின் போது மயங்கி விழுந்து பேரூராட்சி ஊழியர் உயிரிழப்பு @ பள்ளிப்பட்டு


பிரதிநிதித்துவப் படம்

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு பேரூராட்சி ஊழியர் ஒருவர் பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (59). இவருக்கு சுசீலா என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். ராஜசேகர் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வரி வசூலிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) காலை வழக்கம் போல் பணிக்குச் சென்ற ராஜசேகர், பள்ளிப்பட்டு பேரூராட்சி பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளில் சொத்து வரி உள்ளிட்டவற்றை வசூல்செய்து விட்டு, மாலை 4.30 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, ராஜசேகர் சகஊழியர்கள் மூலமாக கோனேட்டம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவரின் பரிசோதனையில் ராஜசேகர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே சமயம், மருத்துவமனைக்கு ராஜசேகர் கொண்டு வரப்பட்டபோது அங்கே போதிய மருத்துவர்கள் பணியில் இல்லை. இதன் காரணமாக அவருக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சையளிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் தான் ராஜசேகர் உயிரிழந்தார் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.