“உடல் நலனுக்கு பழைய சோறு நல்லது” - தமிழ்நாடு எம்ஜிஆர் பல்கலை. துணை வேந்தர்


பிரதிநிதித்துவப் படம்

மதுரை: ‘‘பழைய சோறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது’’ என்று தமிழ்நாடு எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.நாராயணசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்திய அனைத்து மருத்துவப்பணியாளர்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை முகாம் மதுரையில் இன்று நடந்தது. இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் சி.தர்மராஜ் தலைமை வகித்தார்.

முகாமில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கைலைக்கழகம் துனை வேந்தர் கே.நாராயணசாமி பேசியதாவது: நோய் வந்தபிறகு என்னென்னவோ சிகிச்சை பெறுவது சரியான வழிமுறை கிடையாது. அந்த நோய் வருவதற்கு முன்பே தடுக்கப்பட வேண்டும். அதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்தக் காலத்தில் உடற்பயிற்சியுடன் உணவுப் பயிற்சியும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப் பாடுகள், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது அவசியமானது. வீட்டில் எல்லோரும் வேலைகள் இருக்கும். அவசரம் அவசரமாக அந்த வேலைகளை முடித்துவிட்டு சரியாக சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் மருத்துவமனை பணிகளுக்கு வருகிறோம்.

அன்றாட வேலைகளுக்கு நடுவே நமது உடல் ஆரோக்கியத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பழைய சோறு பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். பழைய சோறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இரவு சோற்றை தண்ணீர் ஊற்றி வைத்து, மறு நாள் காலையில் கொஞ்சம் தயிறு அல்லது மோர் ஊற்றி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

நமது முன்னோர்கள் அப்படி சாப்பிட்டதாலேயே நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் பெற்றிருந்தார்கள். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கக் கூடியவர்கள், ஊறுகாய், அப்பளம், வடகம், மட்டன் சிக்கன், காரக் குழம்பு போன்ற உப்பு அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த விஷயத்திற்கும் வருத்தப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. எந்த மாற்றமும் நிகழ்ந்து விடுவதில்லை. முன்பு 30 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் பார்க்க வேண்டும் என்பார்கள். தற்போது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் பார்க்கச் சொல்கிறார்கள். மருத்துவப்

பணியாளர்கள் மற்றவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு காட்டும் அக்கறையை நமது உடல் நலனிலும் காட்ட வேண்டும். அதுபோல், நமது உடல் ஆரோக்கியத்திற்கு காரணமான நல்ல தகவல்களை மற்றவர்களுக்கும் பகிர வேண்டும். பணி நேரத்தில் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.