புதுச்சேரியில் நடப்பாண்டு 1.5 லட்சம் மரங்கள் நட 'காவேரி கூக்குரல் இயக்கம்' இலக்கு


புதுச்சேரி: புதுச்சேரியில் 1.5 லட்சம் மரங்கள் நடும் திட்டத்தை எஸ் எஸ் பி நாரா சைத்தன்யா இன்று தொடக்கி வைத்தார்.

ஈஷாவின் ‘காவேரி கூக்குரல் இயக்கம்’ மூலம் இந்தாண்டு புதுச்சேரியில் உள்ள விவசாய நிலங்களில் 1,50,000 மரக் கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று புதுச்சேரி கோரிமேட்டில் ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) நாரா சைத்தன்யா முதல் மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “வருங்கால சந்ததியினருக்கு நாம் என்ன கொடுத்து செல்கிறோம் என்பது தான் முக்கியம். நாம் பெரும்பாலும் நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல வருவாய் தரும் சூழல் இவற்றை தான் கொடுக்க நினைக்கிறோம். ஆனால், இன்று நாம் கொடுத்திருப்பது மாசுபட்ட காற்று, உணவு மற்றும் ஏராளமான கண்ணுக்கு தெரியாத நோய்கள்.

கால நிலை மாற்றம் என்பது இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் திடீரென வரும் வெள்ளம், அதீத வெப்பம் என பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்கிறோம். கால நிலை மாற்றம் சார்ந்த கொள்கைகள் வகுப்பது இந்த தருணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. தாய் மண்ணுக்கு சேவையாற்றுவதை காட்டிலும் வேறொரு மகத்தான பணி இல்லை" என்றார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் பேசியவர்கள், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இவ்வியக்கம் மூலம் நடப்பு நிதியாண்டில் 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு புதுச்சேரியில் மட்டும் 1,00,000 மரங்களும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது. விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்து பராமரிப்பிற்கும் தேவையான தொழில் நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறோம்.

மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடு பயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கே சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிகள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றனர்.