ஜவ்வாது மலையடிவாரத்தில் கி.பி.16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு


ஜவ்வாது மலையடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையடிவாரத்தில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘தானக் கல்வெட்டு’ கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி தலைமையில், காணிநிலம் மு.முனிசாமி மற்றும் ஆய்வுக்குழுவினர் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வரலாற்று தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், ஜவ்வாதுமலை பகுதியில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து இந்து தமிழ் திசை செய்தியாளரிடம், பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி கூறியதாவது, “எங்கள் ஆய்வுக்குழு கடந்த 15 ஆண்டுகளாக திருப்பத்தூர் பகுதியில் உள்ள வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் ஊரில் இருந்து ஜவ்வாதுமலை அடியோரம் உள்ள சின்னவட்டானூர் என்ற மலையூருக்குச் செல்லும் அடர்ந்த காட்டு வழியில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகரக் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டொன்றைச் சின்னவட்டானூர் கண்டறிந்தோம். அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் கொடுத்த தகவலின் பேரில் இந்த ஆராய்ச்சியை நாங்கள் மேற்கொண்டோம்.

ஆண்டியப்பனூரில் இருந்து சின்னவட்டானூர் செல்லும் காட்டுபாதையில் 5 கி.மீட்டர் தொலைவில் ஊர் மேடு என்ற இடத்தில் இந்த கல்வெட்டு உள்ளது. ஜவ்வாதுமலைக்கும், ஜவ்வாதுமலையின் ஒரு கூறான குடகு மலைக்கும் இடைப்பட்ட இடத்தில் இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

கல்வெட்டு உள்ள இடத்தை ஊர் மக்கள் குறிப்பாக மார்க்கண்டராவ் என்பவர், ஊர் மேடு என கூறினார். இப்பகுதி 500 ஆண்டுகளுக்கு முன்பு வளமான ஊராக இருந்திருக்க வேண்டும். உடைந்த பானை ஓடுகள் இப்பகுதியில் கிடைக்கின்றன. ஜவ்வாதுமலையில் இருந்து ஆண்டியப்பனூர் அணைக்கு வரும் முக்கியமான சிற்றாறு இந்த இடத்தில் ஓடுகிறது.

பழங்கால மக்கள், இங்கு ஊரை அமைத்து வாழ்ந்ததற்கு முக்கியக் காரணம் இந்த சிற்றாறே தான். இந்த ஆற்றின் குறுக்கே 30 அடி நீளத்திற்கு கருங்கற்களால் ஆன கல்லணை ஒன்றைக் கட்டி, நீரைத் தேக்கி குடிநீர், வேளாண்மைக்குப் பழங்கால மக்கள் பயன்படுத்தி இருந்ததை கள ஆய்வில் காண முடிந்தது. இந்த ஊரில் குலோத்துங்க சோழன் காலத்தைய சித்திரமேதிக் கல், திருமகள் உருவத்தோடு இருப்பது, 1,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பகுதியில் நீர்ப்பாசனம் இருந்ததால் வேளாண்மை சிறப்பாக நடைப்பெற்றதை அறிய முடிகிறது.

ஜவ்வாதுமலைப் பகுதிகளில் உள்ள கம்புகுடி பகுதி, சின்னவட்டானூர், கல்லாவூர் பகுதியில் உருவாகும் நீர் நிலைகள் ஆண்டியப்பனூர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய அணை ஆண்டியப்பனூர் அணையாகும். நீர் நிலைகள் உள்ள இடத்தில் தான் வேளாண்மையும், நாகரிகமும் தோன்றும் என்பது உலக வரலாறு.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்ட நாகரீகத்தில் இந்த ஆற்றுப்படுக்கைக்கும் முக்கிய இடமுண்டு. கரிகாலன் என்னும் சோழ மன்னன் தன் ஆட்சிக் காலத்தில் காடுகளை அழித்து நாடாக்கினார். குளங்களை வெட்டி சோழ நாட்டை விரிவுப்படுத்தினார் என்று பட்டினப்பாலை என்ற நூல் கூறுகிறது. அந்த இலக்கிய குறிப்புக்கு ஏற்றாற் போல அடர்ந்த காட்டுப்பகுதியை வெட்டி ஊராக்கி உள்ளனர். அந்த வழியாக ஓடிவந்த ஆற்றின் குறுக்கே சிறிய அணையைக் கட்டி நீரைத்தேக்கி உள்ளனர்.

அந்த ஆற்றுக்கு மக்கள் நரிவிழுந்த மடூஉ என்றும், பார்ப்பான் ஆறு என்றும் பேச்சுவழக்கில் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்டியப்பனூர் அணையில் இருந்து வெளியேறும் ஆற்றிற்குப் பாம்பாறு என்று பொறுநிலையில் பெயர் வழங்கப்படுகிறது. இத்தகைய வளம் பொருந்திய ஊர் பகுதியில் கோயில் ஒன்று இருந்திருக்க வேண்டும். அந்தக் கோயிலைக் கட்டி, அதன் வளர்ச்சிக்காக ஒருவர் தானம் கொடுத்த செய்தியை இந்த கல்வெட்டுக் கூறுகிறது.

இந்த கல்வெட்டானது 3.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லின் முன்பக்கம் கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது. இதில் ‘திதமவலத்தன்’ என்ற பெயர் உள்ளது. கல்லின் மறுப்பக்கத்தில் சூலம், சூரியன், சந்திரன், ஒரு பீடம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சூலம் என்பது சிவன் கோயிலுக்குத் தானமளிப்பதன் குறியீடாகும்.

சந்திரன், சூரியன் என்பது, சந்திரனும், சூரியனும் உள்ள வரை இந்தக் தானம் இந்தரக் கோயிலுக்கு வழங்கப்படும் என்பது பொருள். இந்தக் காட்டுப் பகுதியில் சிவன் கோயில் ஒன்று வழிபாட்டில் இருந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குத் தானமாக ‘திதமவலத்தன்’ என்பவர் தந்துள்ளதை இந்த கல்வெட்டு பதிவு செய்கிறது.

இன்றைக்கும் ஜவ்வாதுமலையில் வாழும் பழங்குடி மக்கள் இந்தக் கல்வெட்டிருக்கும் வழியாகத்தான் தங்கள் மலையில் விளையும் மலைவிளைப் பொருட்களைச் சந்தைப்படுத்த ஆண்டியப்பனூர் பகுதிக்கு வருகின்றனர். இந்த ஊர் மேடு பகுதியையும் ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையையும் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.

மேலும் இந்த மலைப் பகுதியைத்தான் சங்க காலத்தில் நன்னன் சேய் நன்னன் என்ற மன்னன் செங்கத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். மலைபடுகடாம் என்னும் சங்க இலக்கிய நூல் இந்த ஜவ்வாதுமலையை நவிரமலை என்று கூறுகிறது. இந்த ஜவ்வாதுமலையில் எங்கள் ஆய்வுக்குழு 12 நவிரமலை என்ற பெயர் தாங்கிய கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளது. ஜவ்வாதுமலைக்குச் சங்க இலக்கியப் பெயரான ‘நவிரமலை’ என்ற பெயரைக் தமிழக அரசு சூட்ட வேண்டும் என்பதும் கூடுதல் கோரிக்கையாக உள்ளது” என்றார்.

x