மதுரையில் உருவாகும் வெப்ப சாலைகள்: மரங்கள் உரிய அனுமதியின்றி வெட்டப்படுவது அதிகரிப்பு


மதுரை: சாலைகளில் மரங்கள் உரிய அனுமதியின்றி வெட்டப்படுவதால் மதுரை மாநகரில் பசுமை சாலைகள் மாயமாகி வெப்ப சாலைகள் உருவாகி வருகிறது.

மதுரை மாநகரில் கடந்த காலத்தில் சாலைகள், தெருக்கள் மற்றும் குடியிருப்புகளில் மரங்கள் அடர்த்தியாக காணப்பட்டன. நாளடைவில் சாலைகளை விரிவாக்கம், புதிய சாலைகள் அமைத்தல், மேம்பாலம் கட்டுமானப் பணி மற்றும் மின்சாரப் பாதையில் இடையூறாக இருப்பதாகவும் கூறி சாலையோர மரங்கள் அகற்றப்பட்டன. ஒரு மரம் வெட்டினால், அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.

ஆனால், இந்த நடைமுறை முறையாக மதுரை மாநகரில் கடைபிடிக்கப்படாததால், ஒரு காலத்தில் குடைகள் போல் நிழல் வந்த பசுமை சாலைகள், தற்போது மரங்கள் இல்லாத மொட்டை சாலையாக மாறிவிட்டன. மதுரை - நத்தம் சாலை, மதுரை - அழகர்கோவில் சாலை, மதுரை - ஒத்தக்கடை சாலை, மதுரை - திருமங்கலம் சாலை மற்றும் நகரச் சாலைகள், கடந்த காலத்தில் வெயிலே படாத பசுமைச் சாலையாக காணப்பட்டன. தற்போது மரங்கள் இல்லாமல் இந்த சாலையில் பயணிப்பது பகல் பொழுதில் சவாலாக உள்ளது. அதனால், கோடைகாலத்தில் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நகராக மதுரை மாறிவிட்டது.

பகல் பொழுது மட்டுமின்றி இரவும் அதிக உஷ்ணத்துடனும், புழுக்கத்துடனும் மக்கள் தவிக்கிறார்கள். மரங்களும், அதன் கிளைகளும் உரிய அனுமதி பெறாமல் வெட்டப்படுவதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே நீர், மண், மலை போன்ற வளங்கள் வளர்ச்சி நோக்கங்களுக்காக மதுரையில் அழிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மரங்களும் பல்வேறு நோக்களுக்காக வெட்டப்படுகின்றன. பொதுவாக மரங்களில் தங்கி வசிக்கும் பறவைகள் மூலமே தாவரங்கள், செடி, கொடிகள் பிற இடங்களுக்கும் பரவுகின்றன.

சாலையோர மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகள் வாழ்விடங்களை பறிக்கொடுத்ததோடு மரங்கள், தாவரங்கள், செடி, கொடிகள் பரவலும் குறைந்துவிட்டது. மரங்களை வளர்ப்பதன் மூலம் நாம் சுவாசிக்கக் கூடிய ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கலாம். தற்போது மரங்கள் குறைந்துவிட்டதால் சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ள நகரங்கள் பட்டியலில் மதுரையும் இடம்பெற்றுள்ளது.

x