5 மாதங்களில் 91,000 சுற்றுலா பயணிகளை வரவேற்ற வேடந்தாங்கல் சரணாலயம்!


வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.

மதுராந்தகம்: வேடந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளை கண்டு ரசிப்பதற்காக, நடப்பாண்டில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் என 91,000 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் ஏரியின் நடுவே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆஸ்திரேலியா, சைபீரியா, பாகிஸ்தான், நியுசிலாந்து, தென்னாப்பிரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் ஆண்டு தோறும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் வந்து செல்கின்றன. இந்த சரணாயலத்துக்கு வரும் பறவைகள் ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்து மீண்டும் குஞ்சுகளுடன் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்கின்றன.

இங்கு வரும் பறவைகளை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் சீசன் நாட்களில் உள்ளூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நடப்பாண்டில் வேடந்தாங்கல் சரணாலத்துக்கு வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட சுமார் 40,000-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்து திரும்பிச் சென்றுள்ளன.

இந்தப் பறவைகளை கண்டு ரசிப்பதற்காக 16,000 சிறுவர்கள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 75,602 பேர், வெளிநாடுகளில் இருந்து 252 பேர் வந்து சென்றுள்ளதாக சரணாலயம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, சரணாலயத்தில் சுமார் 10,000 பறவைகள் மட்டுமே உள்ளன. எனினும், பறவைகளை கண்டு ரசிப்பதற்காக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.