ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் விடுதலை: பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பு


சண்டிகர்: தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

ஹரியாணாவின் சிர்சாவில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்புக்கு பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உட்பட உலகம் முழுவதும் 36 ஆசிரமங்கள் உள்ளன. சுமார் 6.5 கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 1990-ம் ஆண்டில் தேரா சச்சா அமைப்பின் தலைமை பொறுப்பை குர்மீத் ராம் ரஹீம் சிங் ஏற்றார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் பின்னணியில் சிர்சா ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் இருப்பதாக குர்மீத் ராம் சந்தேகம் அடைந்தார்.

இந்த சூழலில் கடந்த 2002-ம்ஆண்டு ஜூலை 10-ம் தேதி ஹரியாணாவின் குருஷேத்ராவில் ரஞ்சித் சிங்கை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, ராம் ரஹீம் சிங் உட்பட 6 பேர் மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின்போது ஒருவர் உயிரிழந்தார்.

பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் வழக்கை விசாரித்து கடந்த 2021-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. அப்போது குர்மீத் ராம் ரஹீம்சிங் உட்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைஎதிர்த்து 5 பேரும் பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் சுரேஸ்வர் தாக்குர், லலித் பத்ரா அமர்வு வழக்கை விசாரித்தது. கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குர்மீத் ராம் ரஹீம் சிங் உட்பட 5 பேரையும் விடுதலை செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

செய்தியாளர் கொலை வழக்கு: குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் ரீதியான புகார்கள் குறித்து செய்தியாளர் ராம்சந்திர சத்ரபதி என்பவர் தனது நாளிதழில் செய்திகளை வெளியிட்டார். இதன் காரணமாக கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபரில் மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

சிர்சா ஆசிரமத்தில் பணியாற்றிய இரு பெண் துறவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குர்மீத் ராமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.

குர்மீத் ராம் மீது இரு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ரோத்தக் சிறையில் உள்ள அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட மாட்டார்.