ரீமல் புயலால் கனமழை, நிலச்சரிவு: மிசோரம் மாநிலத்தில் 22 பேர் உயிரிழப்பு


அய்சால்: மிசோரம் மாநிலத்தின் அய்சால் மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 22 பேர் உயிரிழந்தனர்.

ரீமல் புயல் தாக்கம் காரணமாக மிசோரம் மாநிலத்திலும் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக அய்சால் மாவட்டத்தில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மெல்தும் மற்றும் ஹிலிமென் என்ற இடத்துக்கு இடையில் உள்ள கல்குவாரி ஒன்று நேற்று காலை இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கினர். இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரை தேடும் பணி நடைபெறுகிறது. கனமழை காரணமாக மீட்பு பணிகள் தாமதமானதாக மிசோரம் டிஜிபி அனில் சுக்லா தெரிவித்தார்.

கனமழை காரணமாக மிசோரம் மாநிலத்தில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அய்சால் நகரில் சலேம் வங் என்ற இடத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேரை காணவில்லை. மிசோரம் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஹந்தார்என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 6-ல் ஏற்பட்ட நிலச்சரிவால் தலைநகர் அய்சால் நாட்டின் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் பல நெடுஞ்சாலைகள் நிலச்சரிவால் சேதம் அடைந்துள்ளன.

தலைநகரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆலோசிக்க மாநில முதல்வர் லால்துஹோமா அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். அய்சால் நகரில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.