‘லவ் ஜிகாத்தால்' பழங்குடி பெண்களுக்கு ஆபத்து: ஜார்க்கண்ட் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு


தும்கா: ‘லவ் ஜிகாத்' மூலம் பழங்குடி பெண்களை, ஊடுருவல்காரர்கள் குறிவைக்கின்றனர். இதன் காரணமாக பழங்குடி பெண்களின் பாதுகாப்பு, வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றுபிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் ஜார்க்கண்ட்டின் 3 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தின் தும்கா நகரில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் ஊழல் விவகாரம் வெளி வந்து கொண்டே இருந்தது. மக்களின் பிரச்சினைகள் குறித்து அந்த கட்சி கவலைப்படவில்லை. ஒரு குடும்பத்தின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தப்பட்டது. மக்களின் வரிப் பணம், நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டன.

கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக அரசு பதவியேற்றது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளன. மத்தியில் பாஜக மீண்டும் பதவியேற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி லட்சாதிபதி பெண்கள் உருவாக்கப்படுவர். 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

ஜார்க்கண்டில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் மாநிலத்தின்வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. மதுபான ஊழல், டெண்டர்ஊழல், நிலக்கரி ஊழல் என ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆளும் கூட்டணியை சேர்ந்த ஊழல்வாதிகளின் வீடுகளில் இருந்து பெரும் தொகை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

‘லவ் ஜிகாத்' என்ற வார்த்தை ஜார்க்கண்டில் இருந்தே உருவானது. இந்த மாநிலத்தில் ‘லவ்ஜிகாத்' மூலம் பழங்குடி பெண்களை, ஊடுருவல்காரர்கள் குறிவைக்கின்றனர். இதனால் பழங்குடிபெண்களின் பாதுகாப்பு, வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நமது பெண்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

திரிணமூல் காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறி: தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 80 எம்எல்ஏக்களை பெற்றது. கடந்த 2019-ம்ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 18 தொகுதி களில் வெற்றி பெற்றது.

மேற்கு வங்கத்தில் பாஜக அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரம் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. அந்த கட்சி தனது இடத்தை தக்க வைத்து கொள்ள போராடி வருகிறது.

மேற்கு வங்கத்தில் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது. இது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இந்த தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x