கேரள கனமழை முதல் மிசோரம் துயரம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> கனமழையில் தத்தளிக்கும் கேரள மாநிலம்: கேரள மாநிலம் கோட்டயம், திருவனந்தபுரம், கொச்சி முதலான பகுதிகளில் பலத்த மழைப் பொழிவு குறித்த எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொச்சியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், கொச்சி பல்கலைக்கழக பகுதியில் ஒன்றரை மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. மேலும், எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் காலை 8.30-க்கு தொடங்கிய மழை சுமார் 4 மணிநேரம் பெய்தது. இந்த கனமழையால் கொச்சி நகரின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், "கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் 204 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது. இது தவிர பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

> கனவு இல்லம் திட்டம்: ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை கண்டிப்பாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி. கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வீடுகள் அனைத்தும் 360 சதுரடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும். இதில் 300 சதுரடி ஆர்.சி.சி கூரையுடனும், மீதமுள்ள 60 சதுரடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாகவும் பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்கப்பட வேண்டும். ஓலை அல்லது அஸ்பெஸ்டாஸ் கூரைகள் அமைக்கப்படக்கூடாது. ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

> மோடி வருகை: குமரியில் பலத்த பாதுகாப்பு: கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் வருகிற 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை, பிரதமர் மோடி 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

> தேவாலய சொத்துகள் குறித்து ஐகோர்ட் புதிய உத்தரவு: இந்து கோயில்கள், வஃக்புவாரிய சொத்துகள் பத்திரப் பதிவு பதிவு செய்யப்படுவதை தடுப்பது போல், கிறிஸ்தவ தேவலாய சொத்துகளை பதிவுத்துறை சட்டம்-1908 பிரிவு 22 ஏ-க்குள் கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

> தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

> காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்: ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் சுமார் 45 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு தனது கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது. “இந்தக் கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

> “ஜெயலலிதா வழியை ஸ்டாலின் பின்பற்ற வேண்டும்”: முல்லைப் பெரியாறில் கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், “தமிழகத்தின் நீராதார உரிமைகளை காக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றவேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாகவே தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் காக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

> கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் விடுவிப்பு: தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்தது பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம். முன்னதாக, 2021ம் ஆண்டில், இந்த கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உட்பட 5 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

> ‘மே மாத ரேஷன் பொருட்களை ஜூனிலும் வாங்கலாம்’: கொள்முதல் தாமதம் காரணமாக, பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

> மிசோரம்: கல்குவாரி பாறைகள் சரிந்து 17 பேர் பலி: மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

x