அதிஷிக்கு சம்மன் முதல் அமித் ஷா நம்பிக்கை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 


> ‘பட்நாயக் முன்னாள் முதல்வராக்கப்படுவார் ’ -அமித் ஷா: ஜூன் 4-ம் தேதிக்கு பின்னர் நவீன் பட்னாயக் ஒடிசாவின் முன்னாள் முதல்வராகி விடுவார். பாஜக 75க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் அடுத்து நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

> பாஜகவின் செல்ஃப் கோல் பிஜூ ஜனதாதளம் வெற்றிக்கு உதவும்: நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா மாநில பேரவைத் தேர்தலில் பாஜக முன்வைத்துள்ள ஒன்பது சுய இலக்குகள் பிஜு ஜனதாதளம் வெற்றிக்கு உதவும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக்கின் நெருங்கிய உதவியாளர் வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

> பிரதமரின் பரமாத்தமா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்வினை: தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானிக்கு உதவி செய்வதற்காகவே பரமாத்ம பிரதமர் நரேந்திர மோடியை அனுப்பி வைத்துள்ளார் என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றின் போது தான் கடவுளால் அனுப்பப்பட்டவன் என பிரதமர் தெரிவித்திருந்ததற்கு ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

> டெல்லிக்கான நீரை ஹரியாணா அரசு வழங்வில்லை: கடந்த மே1ம் தேதியில் இருந்து யமுனை நதி நீரில் டெல்லிக்கான பங்கை ஹரியாணா அரசு விடுவிக்கவில்லை என்று டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தேசிய தலைநகரில் தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

> ஷாஜகான் சேக் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்: ஜனவரி 5ம் தேதி சந்தேஷ்காலியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷாஜகான் சேக் மீது சிபிஐ குற்றப்பத்திர்கை தாக்கல் செய்துள்ளது.

> சசி தரூர் வெள்ளையர் என பாஜக எம்பி விமர்சனம்: பாதிய ஜனதா கட்சி எம்.பி., ரவி கிருஷ்ணன் காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.,யுமான சரி தரூரை வெள்ளையர் (ஆங்கில மனிதர்) என்று விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களைத் தாண்டாது என சசி தரூர் தெரிவித்ததைத் தொடர்ந்து ரவி கிருஷ்ணன் இவ்வாறு விமர்ச்சித்துள்ளார்.

> உமர் காலித் ஜாமீன் மனு நிராகரிப்பு: கடந்த 2020ம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்துக்கான சதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வுமாணவர் உமர் காலித்-ன் ஜாமீன் மனுவினை டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ளது.

> டெல்லி அமைச்சர் அதிஷிக்கு அவதூறு வழக்கில் சம்மன்: ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்ததாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்தாக டெல்லி பாஜக ஊடகப்பிரிவு தலைவர் பிரவீன் ஷங்கர் கபூர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு ரோஸ் அவனியூ கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஜூன் 29ம் தேதிக்கு முன்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு கூறியுள்ளது.

> பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளிக்கிறது - சல்மான் குர்ஷித்: மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளித்து வருகிறது என்றும், இது இரு தரப்புக்கும் நெருக்கமான போட்டி என்பதில் சந்தேகம் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

> தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா பரிசீலனை: தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நோவோஸ்டி தெரிவித்துள்ளது. இதனை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

x