மே 31-ம் தேதி போலீஸில் சரணடைய உள்ளேன்: வீடியோ மூலம் பிரஜ்வல் ரேவண்ணா தகவல்


பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3,000 ஆபாச‌ வீடியோக்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியானது.

இதையடுத்து, அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார். மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் அவர் மீது புகார் அளித்ததை தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் 4 வழக்குகள் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ், ப்ளூகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டும் பிரஜ்வல் ரேவண்ணா நேரில் ஆஜராகவில்லை. எனவே அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா 2 முறை கடிதம் எழுதினார்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா நேற்று வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘என் மீதான குற்றச் சாட்டுகள் வெளியாவதற்கு முன்பே நான் வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம். என் மீதான புகாரை யூடியூப் மூலமாகவே தெரிந்துகொண்டேன். அதில் உண்மை இல்லை. இருப்பினும் என் அப்பா, அம்மா, தாத்தா, சித்தப்பா மற்றும் மஜத தொண்டர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இப்போதைக்கு நான் வெளிநாட்டில் எங்கு இருக்கிறேன் என்கிற தகவலை தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த விவகாரத்தில் நான் ஓடி ஒளியவில்லை. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் என் வழக்கறிஞர் மூலமாக 7 நாட்கள் கால அவகாசம் கோரினேன். வரும் மே 31-ம் தேதி காலை 10 மணிக்கு போலீஸார் முன்னிலையில் சரணடைய இருக்கிறேன்.

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபிப்பேன். எனது அரசியல் வளர்ச்சியை பிடிக்காத சிலர் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சதியை செய்துள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.

-இரா.வினோத்

x