இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாள் நீட்டிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மனு


புதுடெல்லி: இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது.

வழக்கு விசாரணையின்போது, மக்களவைத் தேர்தல் நடைபெறும் தருணத்தில் கைது செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது எனகேஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ஏதுவாக,இறுதிகட்ட தேர்தல் நாளானஜூன் 1-ம் தேதி வரை அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கிநீதிபதிகள் உத்தரவிட்டனர். 2-ம்தேதி திகார் சிறைக்கு திரும்பவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். டெல்லியில் கடந்த 25-ம்தேதி 6-ம் கட்டமாக நடந்த தேர்தலில் கேஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

இந்நிலையில், இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆதிஷி கூறும்போது, “கேஜ்ரிவால் கைதுசெய்யப்பட்ட பிறகு 7 கிலோ எடைகுறைந்துள்ளார். எனவே, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டி உள்ளதால் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம்” என்றார்.