நேருவின் 60-வது நினைவு தினம் அனுசரிப்பு: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி


புதுடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஜவகர்லால் நேரு. கடந்த 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றார். அதன்பிறகு 16 ஆண்டுகள் நேரு பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1964-ம் ஆண்டு மே 27-ம் தேதி மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். அதன்பின்னர், 2-வது பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவியேற்றார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததற்காக நேரு போற்றப்படுகிறார். குறிப்பாக அணி சேரா இயக்கத்தின் முன்னோடியாக புகழப்படுகிறார். குழந்தைகள் மீது மிகவும் அன்பு செலுத்தியவர் நேரு. அவரை நேரு மாமா என்றே அன்பாக அழைத்தனர். நேரு பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் சிறுவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நேருவின் 60-வது நினைவு தினம் நேற்று நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்திவனத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, கார்கே, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.