“எனக்கும் குடும்பத்துக்கும் அச்சுறுத்தல்” - நீதிமன்றத்தில் ஸ்வாதி மாலிவால் கதறல்


புதுடெல்லி: ஸ்வாதி மாலிவால் தாக்குதல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி பிபவ் குமார் தாக்கல் செய்த மனு டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்வாதி மாலிவால் ஆஜராகி இருந்தார். பிபவ் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என் ஹரிஹரன், "டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திக்க முன் அனுமதி எதையும் ஸ்வாதி மாலிவால் பெறவில்லை. கேஜ்ரிவாலின் வீட்டுக்கு வருவது குறித்தும் அவர் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. கேஜ்ரிவாலின் வீட்டுக்கு ஸ்வாதி மாலிவால் வந்தபோது அங்கு பிபவ் குமார் இல்லை. அவரை ஸ்வாதி மாலிவால்தான் அழைத்தார்.

முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இவ்வாறு யாராவது நுழைய முடியுமா? இது அத்துமீறல் இல்லையா? இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஊழியர்களால் ஸ்வாதி மாலிவால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது ஸ்வாதி மாலிவால், அவர்களிடம் ஒரு எம்பியை நீங்கள் காத்திருக்க வைப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்" என வாதிட்டார்.

வழக்கு விசாரணையின்போது கண்ணீர் விட்ட ஸ்வாதி மாலிவால், "மற்றவர்களுக்கு எதிராக தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொய் செய்திகளை பரப்புவதற்கு என்று அவர்களிடம் ஒரு பெரிய ஏற்பாடு இருக்கிறது. அதனை அவர்கள் எனக்கு எதிராக தூண்டிவிட்டிருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டுள்ள பிபவ் குமாரை, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மும்பை மற்றும் லக்னோவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த குற்றவாளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். பிபவ் குமார் ஒரு சாதாரண மனிதர் அல்ல. அமைச்சர்கள் பயன்படுத்தும் வசதிகளை அவர் பெறுகிறார்" என்று குற்றம் சாட்டினார். இரு தரப்பு வாதங்களை அடுத்து, பிபவ் குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு கடந்த 13ம் தேதி தான் சென்றபோது, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன் மீது தாக்குதல் நடத்தியதாக டெல்லி காவல்துறையில் ஸ்வாதி மாலிவால் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், டெல்லி காவல்துறையால் பிபவ் குமார் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x