ரீமல் புயல் பாதிப்புகள் முதல் பிரஜ்வல் பரபரப்பு வீடியோ வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> ரீமல் புயல் பாதிப்புகள்: மேற்கு வங்கத்தில் பெரும் சேதம்: ரீமல் புயல் தாக்கத்தின் எதிரொலியாக மேற்கு வங்கத்தில் இருவர் உயிரிழந்தனர். அத்துடன், இந்தப் புயலால் கடுமையான பொருட்சேதம், கட்டுமானங்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வங்க தேசத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 30,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கக்கடலில் நிலவிய ரீமல் தீவிர புயல், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் - வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால், மேற்கு வங்கத்தில் குறிப்பாக தலைநகர் கொல்கத்தாவில், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புயல் மழையால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கூடவே சிறிய கூரை, தகர வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் மட்டும் 45 பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

> ‘தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்’: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில், தேர்தல் முடிவுற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு நடைபெறும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

> ‘ஜூன் 4-க்குப் பிறகு கார்கே பதவி இழப்பார்’ - அமித் ஷா: உத்தரப் பிரதேசத்தின் குஷி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “முதல் 5 கட்டத் தேர்தல்களில் மோடி 310 இடங்களைக் கடந்துவிட்டார். 6 மற்றும் 7-வது கட்டத் தேர்தலுக்குப் பிறகு அவர் 400-ஐ தாண்ட வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40-ஐ கூட தாண்ட முடியாது. சமாஜ்வாதி கட்சி 4 இடங்களைத் தாண்டாது. ஜூன் 4-ம் தேதி மதியம் ராகுல் காந்தியின் ஆட்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால் தோற்றுவிட்டோம் என்று சொல்வதை நீங்கள் பார்ப்பீர்கள். அதோடு, தோல்விக்கான பழி மல்லிகார்ஜுன கார்கே மீது விழும். அவர் தனது பதவியை இழப்பார்” என்று கூறினார்.

> மோடியின் ‘கடவுள் கதை’ - ராகுல் காந்தி கிண்டல்: பிஹாரின் பாலிகஞ்ச்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, "பரமாத்மா கதையை நரேந்திர மோடி ஏன் ஆரம்பித்தார் தெரியுமா? தேர்தலுக்குப் பிறகு அதானி பற்றி அமலாக்கத் துறை கேள்வி கேட்டால், 'எனக்குத் தெரியாது, கடவுள் இதை என்னிடம் சொன்னார்' என்று நரேந்திர மோடி சொல்வார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏழைகளுக்கு நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை. நரேந்திர மோடி 22 பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளார். நாங்கள் கோடிக்கணக்கான கோடீஸ்வரர்களை உருவாக்கப் போகிறோம். இந்திய அரசு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாயை நாட்டின் ஏழைப் பெண்களின் கணக்கில் டெபாசிட் செய்யும்” என்று கூறினார்.

> புதிய நிலக்கரி சுரங்கத்தை வாங்குகிறது தமிழ்நாடு மின்வாரியம்: உடன்குடி மற்றும் உப்பூர் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி அதிக அளவு தேவைப்படுகிறது. இதற்காக, புதிய நிலக்கரி சுரங்கத்தை தமிழக மின்வாரியம் வாங்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில் உள்ள சகிகோபால் ககுர்க்கி என்ற புதிய நிலக்கரி சுரங்கரத்தை தமிழக மின்வாரியம் அடுத்த மாதம் வாங்குகிறது. 1,950 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தச் சுரங்கத்தில் 4,500 டன் முதல் 5,200 டன் அளவு வரையிலான நிலக்கரி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

> சவுக்கு சங்கர் வழக்கு: வழக்கறிஞர் கடிதம்: சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக, யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் எனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தது நினவைுகூரத்தக்கது.

> “ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவா தலைவர்” - அண்ணாமலை: "ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவா தலைவர். இதில் அதிமுகவினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், 1995-ல் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா பற்றிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்துத்துவா என்னவென்பது பற்றிய வழக்கின் தீர்ப்பு அது. அதனை அதிமுக தலைவர்கள் படிக்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், “பொது சிவில் சட்டம் வேண்டும் என்றும் பேசிய ஜெயலலிதா, ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க சொன்னார். நான் கூறுவதை அதிமுக எதிர்த்தால் விவாதத்துக்கு பாஜக தயாராக உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, “நிச்சயமாக சொல்கிறேன்... ஜெயலலிதா இந்து மதம் மீது மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஒரு இந்துத்துவா தலைவர் தான். இன்று சிலர் இதை எதிர்க்கலாம். கோயில்களில் குடமுழுக்கு நடத்துவதாக இருக்கட்டும், கர சேவகர்களுக்கு பாராட்டு தெரிவித்தது, கர சேவகர்களை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்டபோது இது தவறு என்று மிக துணிச்சலாக குரல் எழுப்பியது, ராமர் கோயில் தேவை என்று தனது தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கியவர் ஜெயலலிதா” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

> ரஃபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 249 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

> பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ பதிவு: பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, வரும் 31-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "மே 31-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் இருந்து நீதிமன்றம் மூலம் வெளியே வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது குடும்பத்தினரிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். "எனது வெளிநாட்டுப் பயணம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. ஹசன் தொகுதியில் ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த பிறகு நான் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டேன். பயணத்தின்போதுதான் என் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து எனக்கு தெரிய வந்தது. ராகுல் காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு எதிராகப் பேசத் தொடங்கினர்.

எனக்கு எதிராக ஓர் அரசியல் சதி உருவாக்கப்பட்டது. கடவுள், மக்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். நான் நிச்சயமாக மே 31-ம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன். அதன் பிறகு என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பேன். என் மீது நம்பிக்கை வையுங்கள்" என்று பிரஜ்வல் தெரிவித்துள்ளார்.

> 3-வது முறையாக கொல்கத்தா சாம்பியன்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

x