‘6-ம் கட்ட தேர்தல் முடிவுகள்... பாஜகவுக்கு சாதகம்; காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு!’


மக்களவைக்கு 6-ம் கட்டமாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவும் காங்கிரஸுக்கு பாதகமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6-ம் கட்டமாக டெல்லி, உ.பி., பிஹார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதே 58 தொகுதிகளில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரம் காங்கிரஸ் சார்பில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.

இதன் அடிப்படையில் பார்த்தால் நடந்து முடிந்த 6-ம் கட்ட தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் காங்கிரஸுக்கு பின்னடைவாகவே இருக்கும்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு முழுவதும் பாஜகவுக்கு சராசரியாக 37%வாக்குகள் கிடைத்தன. ஆனால், நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்ற 58 தொகுதிகளில் அப்போது பாஜகவுக்கு 47% வாக்குகள்கிடைத்தன. இதுபோல 2019-ல் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு 19.6% வாக்குகள் பதிவான நிலையில், 6-ம் கட்ட தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் அக்கட்சிக்கு 11.8% வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது அக்கட்சியின் தேசிய சராசரியைவிட 8% குறைவு.

கடந்த 2019 தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் 5 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதுபோல 2019 தேர்தலில் டெல்லி (7), ஹரியாணாவில் (10) அனைத்து தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது. டெல்லியில் பாஜகவுக்கு 56.6%, ஹரியாணாவில் 58% வாக்குகள் கிடைத்தன.

x