வலுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை முதல் சவுக்கு சங்கர் வழக்கில் பரபரப்பு வரை | டாப் 20 விரைவுச் செய்திகள்


> முல்லைப் பெரியாறு பிரச்சினை: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்: "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது” என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

‘கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, “உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணிக் கட்சி என்று பாராமல், கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார்.

> தமிழகத்தில் ஜூன் 6-ல் பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 6-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறந்து, அன்றைய தினமே 2024-25-ம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

> திருவள்ளுவருக்கு காவி உடை - ஆளுநர் மீது அமைச்சர் அதிருப்தி: ஆளுநர் மாளிகையில் நடைபெறும் திருவள்ளுவர் தின விழா அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் இடம் பெற்றிருந்ததற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, “நமது கெட்ட நேரம். இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கெனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது. திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும்? வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்துக்கு மருந்தில்லை” என்றார்.

> தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை வாய்ப்பு: தமிழகத்தில் மே 25 முதல் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

>‘வாக்குகள் அதிகமாக இருந்தால்...’ - பாஜகவுக்கு சீமான் சவால்: ‘ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு கூட்டணியின்றி பாஜக தனித்து பெற்ற வாக்குகள், நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இருந்தது என்றால், நான் கட்சியை கலைத்துவிட்டு சென்றுவிடுகிறேன். அதன்பின் பெரிய கட்சி யார் என்பது தெரிந்துவிடும்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

> அனுமதி இன்றி தடுப்பணை கட்ட கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் தடை: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அனுமதி இன்றி தடுப்பணை கட்டினால் தடை விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், “சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதிபெற்றிருந்தால் மட்டுமே அத்திட்டத்தை தொடர அனுமதிக்க முடியும். இது தொடர்பாக கேரள நீர்வள ஆதாரத்துறை மற்றும் வனத்துறை ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உரிய அனுமதி பெறாவிட்டால் திட்டத்துக்கு தடை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணை ஜூலை 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

> புனே கார் விபத்து வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முயற்சி: “புனேவில் விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை சிறுவன் ஓட்டவில்லை என்றும், அதனை அவரது குடும்ப ஓட்டுநரே ஓட்டினார் என்றும் நம்பவைக்க முயற்சிகள் நடந்துள்ளன. சாட்சிகளைக் கலைக்க முயன்றதாக வழக்கு பதியப்படும்” என்று புனே காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

> தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு: வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை நிராகரித்தது. இன்றைய விசாரணையின்போது, “ஏற்கெனவே, ஐந்து கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. 6-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது. அதனால், தேர்தல் முடிந்தபின் இந்த வழக்கு விசாரணை செய்யப்படும். கோடை விடுமுறை முடிந்தபின் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். அதுவரை எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று கூறிய நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

> சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்துள்ளனர். அதேநேரம், கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு உடனடியாக மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை, எனவே, அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். ஆனால், “இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்” என நீதிபதி பி.பி.பாலாஜி உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், ‘சவுக்கு சங்கர் மீதான போதைப்பொருள் வழக்கு குறித்த தகவல்கள் எதுவும் அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையில் குறிப்பிடப்படவில்லை. குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்தாலும், சவுக்கு சங்கர் மீது மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால், அவர் சிறையில் தான் இருப்பார்.

மேலும், உச்சபட்ச அதிகாரம் படைத்த நபர் ஒருவர் என்னை அணுகி இந்த வழக்கை இறுதி விசாரணக்கு எடுக்கக் கூடாது என்றும், அரசுக்கு சாதகமாக தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறினார். எனவே, நான் வழக்கை இன்றே இறுதி விசாரணைக்கு எடுத்தேன்’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

> “ஆஸ்திரேலியர்களை பிசிசிஐ அணுகவில்லை” - ஜெய் ஷா: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்காக எந்த ஆஸ்திரேலிய வீரர்களையும் அணுகவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை நிராகரித்ததாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லங்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

> தானே ரசாயன ஆலை வெடி விபத்து பலி 10 ஆக அதிகரிப்பு: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் நடந்த ரசாயன தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

> பிபவ் குமாருக்கு 4 நாள் நீதிமன்ற காவல்: ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மலிவாலை தாக்கிய வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு நான்கு நாட்கள் நீதிமன்ற காவல் வைக்கும் படி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.

> பிரஷாந்த் கிஷோருக்கு பாஜக நிதியுதவி செய்கிறது - தேஜஸ்வி யாதவ்: "பிரஷாந்த் கிஷோர் பாஜகவின் முகவர். பாஜக தோல்வியடைந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் மூன்று நான்கு சுற்று வாக்குப்பதிவு முடிந்த பின்பு ஒரு கதையை உருவாக்க அவர் அழைக்கப்பட்டுள்ளார். பிரஷாந்த் கிஷோர் பாஜக முகவர் மட்டும் இல்லை. பாஜக மனம் கொண்டவர், அதன் சித்தாந்த்தை பின்பற்றுபவர். பாஜக அதன் வியூகத்தின் ஒருபகுதியாக கிஷோருக்கு நிதியுதவி அளிக்கிறது" என்று பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

> அது கவுடாக்களின் குடும்ப பிரச்சினை - டி.கே. சிவகுமார்: முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா திரும்பி ஆபாச வீடியோ விவகார வழக்கில் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்திருந்த நிலையில் அதுகுறித்த கேள்விக்கு, அது கவுடாக்களின் குடும்ப பிரச்சினை அதில் நான் தலையிட விரும்பவில்லை என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

> ‘பாஜகவுக்குள் அசிங்கமான வாரிசு போர்’- அரவிந்த் கேஜ்ரிவால்: சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "பாஜகவுக்குள் அசிங்கமான வாரிசுப் போர் நடக்கிறது என்றும், அமித் ஷாவுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதற்காக அனைத்து பெரிய தலைவர்களையும் பிரதமர் மோடி நீக்கிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

> சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில், அந்த மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

> ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் அரசுக்கு ராமதாஸ் கேள்வி: கிருஷ்ணகிரியில் ஒரு இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

> பேரனுக்கு உதவியதாக தேவதவுடா மீது சித்தராமையா குற்றச்சாட்டு: பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தனது பேரனும், மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் செல்ல முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா உதவி உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

> வங்கதேச எம்.பி. கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்: கொல்கத்தாவில் கொல்லப்பட்டதாக நம்பப்படும் வங்கதேசத்தின் எம்.பி., அன்வருல் அஷிமின் தோல்கள் உரிக்கப்பட்டு, உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு,பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு நகர் முழுவதும் வீசப்பட்டதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

> பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு: தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

x