கூட்டணி கட்சிக்கு எதிராக வேட்புமனு தாக்கல்: போஜ்புரி பாடகர் பவன் சிங்கை நீக்கியது பாஜக


பாட்னா: போஜ்புரி பாடகரும் நடிகருமான பவன் சிங்குக்கு மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. ஆனால், இதை மறுத்துவிட்ட அவர், பிஹார் மாநிலம் காரகட் தொகுதியில் சுயேச்்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அதுவும் குறிப்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று பவன் சிங்கை கட்சியிலிருந்து பாஜக நீக்கியுள்ளது.

இதுகுறித்து பவன் சிங் எக்ஸ் தளத்தில், “பாஜக என் மீது நம்பிக்கை வைத்து மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. இதற்காக அக்கட்சித் தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், சில காரணங்களால் என்னால் அந்தத் தொகுதியில் போட்டியிட முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.