பிரசாந்த் கிஷோரை தண்ணீர் குடிக்க வைத்தாரா கரண் தாப்பர்? 


புதுடெல்லி: ‘தி வயர்’ ஊடகத்துக்காக கரண் தாப்பருக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேர்காணல் அளித்திருந்தார். இதில் மக்களவை தேர்தல் முடிவுகள், பாஜக, காங்கிரஸ் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர் பதிலளித்தார்.

சொந்த நாட்டு மக்களை ஊடுருவல்காரர்கள் என பிரதமர் மோடி கூறியது இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், "2014, 2019 தேர்தல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்து - முஸ்லிம் விவகாரத்தை பாஜக எழுப்பி இருக்கிறது. இந்து - முஸ்லிம் விவகாரம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் முக்கிய ஆயுதங்களில் ஒன்று. 2019 தேர்தலின்போது புல்வாமா தாக்குதல் பெரிதாக பேசப்பட்டது" என கூறினார்.

மேலும் "இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் வேரோடு அறுக்கப்படும் என்று கூறினீர்கள். ஆனால் காங்கிரஸ் வென்றது. தற்போது பாஜக 300+ இடங்களில் வெற்றி பெறும் என கூறுகிறார்கள். உங்கள் கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது?" என்ற கரண் தாப்பரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், "ஹரியாணா தேர்தல் தொடர்பாக நான் அப்படி தெரிவித்ததற்கான வீடியோ ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? வீடியோ ஆதாரத்தைக் காட்டுங்கள். நான் அப்படி சொல்லி இருந்தால், நான் தற்போது செய்து வருவதை நிறுத்திக்கொள்கிறேன். இல்லாவிட்டால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என கூறினார்.

அதற்கு கரண் தாப்பர், நீங்கள் என்ன கூறினீர்களோ, அது எழுத்து வடிவில் செய்தியாகி இருக்கிறது என தெரிவித்தார். அதற்கு, "நான் கூறியதைத்தான் அவர்கள் எழுதினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. பத்திரிகைகளில் என்ன வந்திருக்கிறது என்பதை நான் ஏற்க மாட்டேன். நான் பேசியது குறித்த வீடியோ இருக்கிறதா? இருந்தால் அதை எனக்கு காட்டுங்கள்" என மீண்டும் மீண்டும் பிரசாந்த கிஷோர் தெரிவித்தார்.

கரண் தாப்பரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது இடையில் பிரசாந்த் கிஷோர் தண்ணீர் குடித்தார். இதனை வைத்து பிரசாந்த் கிஷோரை கரண் தாப்பர் தண்ணர் குடிக்க வைத்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ள பிரசாந்த் கிஷோர், "தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனெனில் இது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்தத் தேர்தலின் முடிவைப் பற்றிய எனது மதிப்பீட்டைக் கண்டு திகைப்பவர்கள் ஜூன் 4-ஆம் தேதியன்று போதுமான அளவு தண்ணீரைக் கையில் வைத்திருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

x