சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு முதல் பிரசாந்த் கிஷோர் கணிப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> தானே ஆலையில் கொதிகலன் வெடித்து 7 பேர் பலி: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

> உருவாகிறது ‘ரீமல்’ புயல்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர புயலாக மாறும் என்றும் எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், அந்தத் தீவிர புயலுக்கு ‘ரீமல்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஓமன் நாடு பரிந்துரைப்படி புயலுக்கு ரீமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புயல் மே 26-ம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கலாம். அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

> 5 மாவட்டங்களில் மழை நீடிப்பு: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையும் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கோடை மழை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 4,385 ஹெக்டேர் பரப்பிலான நெல், சோளம், பருப்பு, எள்ளு, கடலை, பருத்தி மற்றும் கரும்பு ஆகிய வேளாண் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன என்று பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

> சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு: எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வார், என்னவெல்லாம் செய்யமாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை இறுதி விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

தனது மகனை விடுவிக்கக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அவ்வளவு அவசரம், அவசரமாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசரம் என்ன? நாளைக்கே இந்த வழக்கில் இறுதி விசாரணை மேற்கொள்ள அப்படி என்ன சிறப்பு உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

> ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 10 தனிப்படைகள் மேற்கொண்டு வரும் விசாரணையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியது.

> வேங்கைவயல் விவகாரத்தில் காவலரிடம் விசாரணை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவலரிடம் சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.

> பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்தியில் பேசி கொலை மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர், அதன்பின் இணைப்பை துண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள், சென்னை காவல் துறையின் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தனர்.

> “பாஜகவுக்கு 300+ உறுதி!”- பிரசாந்த் கிஷோர்: மக்களவைத் தேர்தல் 2024-ல் பாஜக 300-க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும். 2019-ஆம் ஆண்டு போல அக்கட்சி 300 இடங்களைப் பெறும். 5-15 இடங்கள் கூடுதலாகக் கூட அவர்களுக்குக் கிடைக்கலாம். மறுபுறம், காங்கிரஸ் கட்சியால் 100 இடங்கள் கூட பெற முடியாது. வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பாஜகவுக்கு சேதம் ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வடக்கு மற்றும் மேற்கில் பாஜக எத்தனை இடங்களை இழந்தாலும் அவற்றை அது கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் இருந்து பெற்றுவிடும். வடக்கு மற்றும் மேற்கில் பாஜக 50 இடங்களை இழந்தாலும், கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள வெற்றிகளின் மூலம் அதை அக்கட்சி ஈடுசெய்யும்" என்று அவர் கணித்துள்ளார்.

மேலும், ‘வாக்குச் சதவீதம் குறைவதால் அல்லது அதிகரிப்பதால் அது ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இரண்டையும் தொடர்பு படுத்துவதற்கான தரவுகள் எதுவும் இல்லை’ என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

> ‘மோடி செய்தவை...’- பட்டியலிட்டு விமர்சித்த ராகுல் காந்தி: “கடவுள் அனுப்பியதாக கூறும் நபர், 22 பணக்காரர்களுக்காக மட்டும் வேலை செய்கிறார். அம்பானி, அதானிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை" என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்தார். முன்னதாக, “கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார்" என்று பிரதமர் மோடி பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.

>‘வேளாண்மைத் துறையில் தமிழகம் முன்னணி’: ரூ.4,366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை, ரூ.651 கோடியில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, ரூ.614 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ரூ.270 கோடி ரூபாயில் விவசாய இயந்திரங்கள், ரூ.56 கோடியில் முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம், ரூ.137 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம், ரூ.139 கோடியில் பயறு பெருக்கத் திட்டம் போன்றவற்றால் இந்தியாவிலேயே தமிழகம், வேளாண்மைத் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

> சொகுசு கார் விபத்து: புனே சிறுவனின் ஜாமீன் ரத்து: கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி வரையில் அவரை கண்காணிப்பு இல்லத்தில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவன் மற்றும் அவரது நண்பர்களுக்கு மது வழங்கிய மதுபானக் கூடத்துக்கு மாநில கலால் துறை சீல் வைத்துள்ளது. மதுபானக் கூட ஊழியர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவன் ஓட்டி வந்த வாகனம் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x