உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் ஹேமந்த் சோரன்


புதுடெல்லி: இடைக்கால ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், ஜாமீன் மனுவில் பல உண்மைகளை ஹேமந்த் சோரன் மறைத்து விட்டதாகக் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து ஜாமீன் மனுவை ஹேமந்த் சோரன் வாபஸ் பெற்றார்.

நில மோசடியுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதனிடையே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கடந்த 10-ம் தேதி வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை சுட்டிக்காட்டி ஹேமந்த் சோரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக் கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘இந்த வழக்கில் என் னைக் கைது செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே, தற்போது நடைபெற்று வரும் மக்கள வைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட எனக்கும் உடனடியாக இடைக்கால ஜாமீனை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும்’’ என்று ஹேமந்த் சோரன் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஹேமந்த் சோரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

அப்போது, நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் கூறும்போது, "டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் வழக்குக்கும் இந்த வழக்குக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இந்த வழக்கில் உங்கள் கட்சிக்காரர் நேர்மையுடன் நடந்துகொள்வார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் நீங்கள் முக்கிய உண்மைகளை மறைத்துவிட்டு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள். உங்கள் நடத்தையில் தவறு இல்லாமல் இல்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் தொடர்பான விஷயம் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். அவர் ஒன்றும் பாமரன் கிடையாது.

இந்த வழக்கில் நாங்கள் இன்னும் ஆழமாக விசாரணை நடத்தினால், அது முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.அவரது ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது.