கனமழை எச்சரிக்கை முதல் மோடியின் ‘வைரல்’ பதில் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> தமிழகத்துக்கு கனமழை முன்னெச்சரிக்கை: வடதமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை காலை 05.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதனால், மே 24-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையை பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

> பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: “தேர்தல் பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் இரு கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மதம் மற்றும் வகுப்புவாத ரீதியில் பிரச்சாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

> சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம்: நாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்ட நிலையில், அதற்கு காரணமான சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

> ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

> ‘டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுத்த பாஜக சதி’: தேர்தல் நேரத்தில், டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சதி செய்துள்ளதாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

> அதானி நிறுவனம் மீது ராகுல் காந்தி குற்றசாட்டு: தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதாக வெளியான செய்தி ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "பாஜக ஆட்சியில் நடந்த மிகப் பெரிய நிலக்கரி ஊழல் அம்பலமாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த எக்ஸ் பதிவில், “பாஜக ஆட்சியில் மிகப் பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடி ஜி-யின் அபிமானத்துக்குரிய நண்பர் அதானி தரம் குறைந்த நிலக்கரியை போலி பில்கள் மூலம் மூன்று மடங்கு விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார்.

அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை ஆகியவை இந்த ஊழலில் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா? ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்திய அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்கும்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

> ‘அரசு பஸ்களில் போலீஸாருக்கு இலவச பயணம்...’: நாகர்கோயிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி பயணச்சீட்டு எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், காவல் துறையினர் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் போலீஸாருக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

> நெல்லையில் 4 ஆண்டுகளில் 240 கொலைகள்: ஆர்டிஐ தகவல்: திருநெல்வேலி மாவட்டத்திலும், மாநகரிலும் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 240 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் போலீஸார் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 887 பேரில் 48 பேர் சிறார் என்பது இன்னொரு அதிர்ச்சி தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது.

> சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் எஸ்.வி. கங்காபுர்வாலா வியாழக்கிழமையுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

> பிரதமர் மோடியின் ‘வைரல்’ பதில்: செய்தி சேனல் ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தபோது, 'நீங்கள் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றுகிறீர்கள். உங்களின் ஆற்றலுக்கு என்ன காரணம்?' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “என் தாய் உயிருடன் இருக்கும் வரை தாய் மூலமாக தான் இந்த உலகுக்கு வந்தேன் என்று நினைத்தேன். அவரின் மரணத்துக்குப் பின் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன்.

நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை. என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மா தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்” என்று கூறினார். பிரதமர் மோடியின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.