இதுவரை ரூ.20 லட்சம் கோடி ஊழல்: இண்டியா கூட்டணி தலைவர்கள் மீது மோடி விமர்சனம்


பிஹாரின் மோதிஹரி, சீவான் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவடைந்தபோதே இண்டியா கூட்டணிதளர்ந்துவிட்டது. இதுவரை 5 கட்ட மக்களவைத் தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. அனைத்து தேர்தல்களிலும் இண்டியா கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. 6-வது, 7-வது கட்ட தேர்தல்களிலும் அந்த கூட்டணி தோல்வி அடைவது உறுதி.

கடந்த கால ஆட்சிகளின் நிர்வாக தவறுகளால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தவறுகள் சரி செய்யப்பட்டு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகிறோம். மத்தியில் பாஜக அரசு பதவியேற்றால் அடுத்த 5 ஆண்டுகள் பாரதம் மிக அபாரமான வளர்ச்சியை அடையும். முன்பைவிட அதிகமாக உழைத்து நாட்டை முன்னேற்றுவேன்.

செல்வச் செழிப்பில் பிறந்தவர்களுக்கு வறுமையை பற்றி தெரியாது. நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு வறுமையின் கொடுமை தெரியும். அதனால்தான் ஏழைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்துகிறேன்.

இதன் ஒரு பகுதியாக ரேஷன் கடைகள் மூலம் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படுகிறது. வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. ஏழை பெண்களுக்கு இலவசமாகசமையல் காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. குக்கிராமங்களுக்கும் மின் வசதிசெய்யப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக மருத்துவ கிசிச்சை வழங்கப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இலவசமாக கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.

ஆனால் இண்டியா கூட்டணி தலைவர்கள், மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. குடும்ப நலனில் மட்டுமே அக்கறைசெலுத்துகின்றனர். மதவாதம், ஜாதிப் பிரிவினை, வாரிசு அரசியல் ஆகிய 3 கொள்கைகளை முன்னிறுத்தி இண்டியா கூட்டணி தலைவர்கள் செயல்படுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. அந்த கட்சி சுமார் 60 ஆண்டுகள் நாட்டின்வளர்ச்சியை சீரழித்துள்ளது. காங்கிரஸின் தவறான கொள்கைகளால் 4 தலைமுறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தேசத்தந்தை காந்தியடிகளின் கொள்கையை காங்கிரஸ் முன்னெடுத்துச் செல்லவில்லை. காந்தியடிகளின் தூய்மை, ஊழல் ஒழிப்பை அந்த கட்சி பின்பற்றவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை நாட்டின் முதல் பிரதமர் நேரு முதல் ராஜீவ் காந்தி வரை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.

பாஜக ஆட்சிக் காலத்தில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு முறையாக அமல் செய்யப்படுகிறது. சமுக நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அனைவருமே ஊழல்வாதிகள். அவர்கள் இதுவரை ரூ.20 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஊழலில் ஈடுபட்டு உள்ளனர்.

பிஹாரில் இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறுகிறது. இதன்மூலம் வளர்ச்சி அடைந்த பிஹார் உருவாகும். பிஹார் வளர்ச்சி அடையும்போது பாரதமும் வளர்ச்சி அடையும். உங்கள் பிள்ளைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.

ஒரு காலத்தில் பிஹாரை சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இப்போது அவர்களுக்கு சொந்த மாநிலத்திலேயே நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பிஹாரின் சம்பிரானில் மத்திய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது. சர்தார் படேல் கூட்டுறவு பயிற்சி கழகம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு சமையல் எரிவாயு ஆலை வெற்றிகரமாக செயல்படுகிறது.

மக்களவைத் தேர்தல் என்பது எம்பியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் மட்டுமல்ல. வலுவான பிரதமர், வலுவான ஆட்சியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகும். மத்தியில் வலுவான அரசு பதவியேற்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன். இண்டியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. மத்தியில் வலுவான பாஜக அரசு ஆட்சியமைக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். இண்டியா கூட்டணி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது. அவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு வங்கி அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் முன்னுரிமை: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் பிரதமர் மோடி பேசியதாவது: இண்டியா கூட்டணி தலைவர்கள் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு, அதனை அழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் அரசு தேர்வாணையம் செயல்படவில்லை. குடும்ப தேர்வாணையம் அமைக்கப்பட்டு சமாஜ்வாதி தலைவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. கும்பமேளாவை விட வாக்குவங்கி அரசியலுக்கு மட்டுமே காங்கிரஸும், சமாஜ்வாதியும் முன்னுரிமை அளிக்கின்றன. சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் புனித பூமியான பிரயாக்ராஜில் வெடிகுண்டுகள் வெடித்தன. ஏழைகளின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டன.

பாஜக ஆட்சியில் பிரயாக்ராஜில் அமைதி நிலவுகிறது. வளர்ச்சிப் பணிகள் வேகம் பெற்றுள்ளன. வியாபாரிகள் அச்சமின்றி வணிகம் செய்கின்றனர். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்து இருக்கிறது. பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை யாரும் அபகரிக்க அனுமதிக்க மாட்டேன். எனக்கு வாரிசு கிடையாது. மக்கள்தான் எனக்கு வாரிசு. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

x