பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது


உ.பி.யின் பரூக்காபாத் தொகுதியில் கடந்த 13-ம் தேதி நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்குள்ள வாக்குச் சாவடி ஒன்றில் கிராம பஞ்சாயத்து தலைவரின் 17-வயது மகன், பாஜகவின் தாமரை சின்னத்துக்கு 8 முறை வாக்களித்துள்ளார். இதனை அவரே தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவும் செய்தார்.

2.19 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அகிலேஷ் தனது பதிவில், “ஒருவேளை இதனைத் தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால் நிச்சயமாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாஜக பூத் கமிட்டி ‘லூட்’ (சூறையாடும்) கமிட்டியாகத் தான் இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எட்டா மாவட்டம் நயாகான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

வாக்குச் சாவடியை நிர்வகித்த அலுவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் மறு வாக்குப் பதிவு நடத்தவும் தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.