“ஆண்டின் சிறந்த எம்.பி. விருது வென்றால் மகிழ்ச்சி அடைவேன்” - கங்கனா ரனாவத்


நடிகை கங்கனா ரனாவத் நடந்து வரும் மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பாக முதல் முறையாகப் போட்டியிடுகிறார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கங்கனா ரனாவத் கூறியதாவது: நடிகையாக பத்மஸ்ரீ உள்ளிட்ட பல தேசிய விருதுகளை வென்றுவிட்டேன்.

இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மண்டி மக்களின் கருத்துகளையும் பிரச்சினைகளையும் ஓயாமல் முன்னிறுத்துவேன். எனது அரசியல் செயல்பாடுகளை பாராட்டி மக்களவை வழங்கக் கூடிய சிறந்த எம்.பி. விருது அளிக்கப்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

நாங்கள் பிரதமர் மோடியின் உத்தரவாதத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவர்கள். கட்சியின் கறாரான வழிகாட்டுதலுக்கு கீழ்ப்படிபவர்கள். ஆகையால் தேர்தலில் வெல்வதற்காக பொய் வாக்குறுதிகளை நாங்கள் கூறுவதில்லை.

இந்த அளவு நேர்மை வேறெந்த கட்சியிடத்திலும் இல்லை என்றே நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். இமாச்சல பிரதேசத்தை பொருத்தவரை இங்குள்ள பழத்தோட்டங்கள் தொடர்பாகத் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு சவால்கள் உள்ளன.

பழங்களை குளிரூட்டி சேமிக்கும் வசதிகளை அதிகரிக்கும்படி சில தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேறு சிலர் இறக்குமதி வரியை உயர்த்தும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.