ஈரான் அதிபர் மரணம் முதல் தமிழக கனமழை எச்சரிக்கை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 


> ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாயனும் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமையன்று அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் திங்கள்கிழமை அடையாளம் காணப்பட்டன.

ஈரான் அதிபர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

> ஈரான் அதிபர் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிதிமிர் புதின், இப்ராஹிம் ரெய்சி ஒரு சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர். அவர் தனது முழு வாழ்க்கையையும் தாய்நாட்டுக்கு சேவை செய்வதில் அர்ப்பணித்தார். ரஷ்யாவின் உண்மையான நண்பராக இருந்தவர் அவர். நமது நாடுகளுக்கு இடையே நல் உறவை மேம்படுத்துவதற்கு விலைமதிப்பற்ற தனிப்பட்ட பங்களிப்பை வழங்கியவர்" என தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங், “இப்ராஹிம் ரெய்சியின் சோகமான மரணம் ஈரானிய மக்களுக்கு ஒரு பெரிய இழப்பு. மேலும், சீன மக்கள் ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்கு ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான போரில் தங்களுக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் குறித்த நினைவுகளை ஹமாஸ் பகிர்ந்துள்ளது.

> ஈரான் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமனம்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஈரான் நாட்டின் முதல் துணை அதிபராக செயல்பட்டு வந்தவர்.

இதனிடையே, ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

> ‘அரசியலமைப்புச் சட்டம்தான் எனது வேதம்’ - மோடி: “என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டமே ஆட்சிக்கான மிகப் பெரிய வேதம். அரசியல்வாதியாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் எனக்கு அரசியல் சட்டம்தான் வழிகாட்டி” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் தென்கனல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார்.

> அமைதியாக நடந்தது 5-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் திங்கள்கிழமை நடந்த 5-ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் அமைதியாக நிறைவடைந்தது.

உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதி என மொத்தம் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில், மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

> பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கருக்கு போலீஸ் காவல்: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு செல்வதையொட்டி பெலிக்ஸுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

> தமிழக பாஜக வலியுறுத்தல்: தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.

> இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை: இந்தோனேசியாவின் மிகப் பெரிய பாலி தீவு பகுதியில் வசித்து வரும் மக்கள் பயனடையும் வகையில் தனது ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் அந்த நாட்டுக்கு பயணித்தார்.

> சிலந்தி ஆற்றில் தடுப்பணை: தமிழக அரசு தடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்: சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு சட்டரீதியாக தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தெரிவித்தார்.

இதனிடையே "காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

> நீலகிரி, கோவை, நெல்லை, குமரிக்கு கனமழை எச்சரிக்கை: நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 23-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையை பொறுத்தவரையில், கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும். விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.