அரசியலமைப்புச் சட்டம்தான் எனது வழிகாட்டி: நரேந்திர மோடி பேச்சு @ ஒடிசா


தென்கனல் (ஒடிசா): அரசியல் அமைப்புச் சட்டம்தான் ஆட்சிக்கான மிகப்பெரிய வேதம் என்றும், அதுதான் தனது வழிகாட்டி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் தென்கனல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “இன்று (மே 20) நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏராளமான வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது கடமைகளைச் செய்து வருகின்றனர். அனைத்து வாக்காளர்களையும், குறிப்பாக அனைத்து முதல்முறை வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒடிசாவின் ஒவ்வொரு கிராமம் மற்றும் தெருவில் இருந்தும் ஒரே மாதிரியான குரல் வருகிறது - ஒடிசாவில் முதல் முறையாக இரட்டை இயந்திர அரசு. இதுதான் அந்த குரல். நீங்கள் 25 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தள (பிஜேடி) அரசாங்கத்தை நம்பி வருகிறீர்கள். இந்த ஆண்டுகளில் ஒடிசா மக்களுக்கு என்ன கிடைத்தது என்று ஒடிசா முழுவதும் தற்போது சுயபரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது.

நான் குஜராத்தில் இருந்து வந்துள்ளேன். சோமநாதரின் தேசத்தில் இருந்து ஜெகந்நாதரின் தேசத்திற்கு எனது வணக்கத்தைச் செலுத்த வந்துள்ளேன். ஆனால், ஒடிசாவில் ஏழ்மையைக் காணும்போது, ​​இவ்வளவு வளமான மாநிலமாகவும், மகத்தான பாரம்பரியத்தைக் கொண்ட என் ஒடிசாவை அழித்தவர் யார் என்று என் இதயத்தில் வலி ஏற்படுகிறது.

பிஜேடி ஆட்சி ஒடிசாவுக்கு எதையும் வழங்கவில்லை. சிறந்த வாழ்க்கை வாழ விவசாயிகளும், இளைஞர்களும், ஆதிவாசிகளும் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆதிவாசி மக்கள் வாழம் இடங்கள் வளமிகுந்தவை. ஆனால், அவர்கள் ஏழ்மையின் பிடியில் இருக்கிறார்கள். ஒடிசாவை அழித்தவர்களை மன்னிக்கக்கூடாது.

நீங்கள் இங்கு பாஜகவின் ஆட்சியை அமைக்கப் போகிறீர்கள். ஒடிசாவின் மகன் அல்லது மகளை மட்டுமே பாஜக முதல்வராக்கும். ஒடிசாவில் ஜூன் 10ஆம் தேதி பாஜகவின் இரட்டை இயந்திர ஆட்சியின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏனெனில், பிஜேடி அரசு விலகுவது உறுதி.

21ஆம் நூற்றாண்டின் ஒடிசாவுக்கு, வளர்ச்சி வேகம் தேவை. பிஜேடி அரசாங்கம் எந்த சூழ்நிலையிலும் வேகமான வளர்சசியைக் கொடுக்க முடியாது. பிஜேடியின் தளர்வான கொள்கைகள், தளர்வான வேலைகள் மற்றும் மெதுவான வேகத்தை விட்டுவிட்டு, பாஜகவின் வேகமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டமே ஆட்சிக்கான மிகப்பெரிய வேதம். அரசியல்வாதியாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் எனக்கு அரசியல் சட்டம்தான் வழிகாட்டி" என தெரிவித்தார்.

முன்னதாக, புரி சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஜகந்நாதரை வழிபட்டார். இதையடுத்து, புரியில் நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.