5-ம் கட்ட மக்களவை தேர்தல்: மாயாவதி உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களிப்பு


புதுடெல்லி: நாடு முழுவதும் 6 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-ம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ஜோயா அக்தார், ஃபர்ஹான் அக்தார் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல் உட்பட மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒடிசாவின் 35 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவும் நடக்கிறது.

ராகுல், ராஜ்நாத் உள்பட 695 வேட்பாளர்கள்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 5-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதிஎன மொத்தம் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்றைய தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, லக்னோ தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பிஹாரின் ஹாஜிபூர் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், பிஹாரின் சரண் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி, ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் ரோகிணி ஆச்சார்யா, மும்பை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் இன்றைய தேர்தல் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள்.

தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “தேர்தல் நடைபெறும் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் சாதனை அளவில் வாக்களிக்க அழைப்பு விடுக்கிறேன். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் இந்த ஜனநாயகத் திருவிழாவில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நடிகர் அக்‌ஷய் குமார், "நான் எனது இந்தியா வலிமையானதாக, வளர்ச்சியடைய ஏதுவாக ஆட்சி அமைய வாக்களித்துள்ளேன். இந்தியா எது சரியோ அதற்கு வாக்களிக்க வேண்டும். வாக்குசதவீதம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

x