மர்ம நபர்கள் விஷம் தெளித்ததே ஹாத்ரஸ் நெரிசலுக்கு காரணம்: போலே பாபாவின் வழக்கறிஞர் தகவல்


ஹாத்ரஸ்: ஹாத்ரஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒரு குழுவினர் விஷம் தெளித்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என போலே பாபாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நேற்று கூறியதாவது:

ஹாத்ரஸில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்தது. இந்த சதிச் செயலில் சுமார் 16 பேருக்கு தொடர்பு உள்ளது. கூட்டநெரிசல் நிகழ்ந்த இடத்தில் அடையாளம் தெரியாத சில வாகனங்கள் இருந்தன. 10 முதல் 12 பேர் விஷத்தை தெளித்தனர். அதன் பிறகு மூச்சுத் திணறி பல பெண்கள் மயங்கி விழுந்ததாகவும், இதில் சிலர் உயிரிழந்ததாகவும் நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவும் ஹாத்ரஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றி, அங்கிருந்த வாகனங்கள் யாருடையது என்பதை கண்டறிய வேண்டும். இந்த சம்பவம் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

என்னுடைய கட்சிக்காரர் (போலே பாபா) எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவருக்காக முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை. இவ்வாறு வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்தார்