ஜார்க்கண்டில் நில மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்தார் ஹேமந்த் சோரன்


ராஞ்சி: ஜார்க்கண்டில் நில மோசடி வழக் கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி வகித்து வந்தார். தலைநகர்ராஞ்சியில் பல கோடி மதிப்புள்ள 8.86 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்துவாங்கியதாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

இதுதொடர்பான வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராக வில்லை. திடீரென அவர் தலை மறைவானார். பின்னர் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு நில மோசடி வழக்கில் கைது செய்ய அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் வழங்கினர். அதை அவர் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். அதன்பிறகு, நில மோசடி,சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்குகளில் கடந்த ஜனவரி மாதம்31-ம் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல் உயர் நீதிமன்றமும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மீண்டும் ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சோரனுக்கு நேற்று ஜாமீன் வழங்கியது. ரூ.50 ஆயிரத்துக்கு 2 பேர் உத்தரவாத தொகை செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஹேமந்த் சோரன்சார்பில் வாதாடிய வழக்கறிஞர்அர்னாப் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சோரனுக்குஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. அவர் மீதான சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் எதுவும் இல்லை’’ என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஹேமந்த் சோரன் பிர்சா முண்டா சிறையில் இருந்து நேற்று விடுதலையானார்.