செல்போன் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது ஜியோ, ஏர்டெல்: 10 முதல் 27 சதவீதம் வரை அதிகரிப்பு


புதுடெல்லி: செல்போன் ரீசார்ஜ் கட்டணங்களை ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 10 முதல் 27 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் இந்த திடீர் கட்டண உயர்வு வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவைகளை வழங்குவதற்காக செல்போன் ரீசாரஜ் கட்டணங்களை 12 முதல் 27 சதவீதம் வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்றுமுன்தினம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, ரூ.155-ஆக இருந்த மாதக் கட்டணம் ரூ.189-ஆகவும், ரூ.399-ஆக இருந்த கட்டணம் ரூ.449-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 28 நாட்களுக்கான 2ஜிபி திட்டம் ரூ.299-லிருந்து ரூ.349-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 3-ம் தேதியிலிருந்து அமலாகும் என ஜியோ அறிவித்திருந்தது.

ஏர்டெல்லும் உயர்த்தியது: இந்த நிலையில், ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை 10 முதல் 21 சதவீதம் வரை உயர்த்துவதாக நேற்று அறிவித்தது. அதன்படி, 1ஜிபிக்கான ஆட்-ஆன் கட்டணம் ரூ.3 உயர்த்தப்பட்டு ரூ.19-லிருந்து ரூ.22-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 365 நாள் வேலிடிட்டி 2ஜிபி திட்டத்துக்கான கட்டணம் ரூ.600 உயர்த்தப்பட்டு ரூ.2,999-லிருந்து ரூ.3,599-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

28 நாள் 2ஜிபி திட்டத்துக்கான கட்டணம் ரூ.20 அதிகரித்து ரூ.179-லிருந்து ரூ.199-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 3-ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் என ஏர்டெல்லும் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் தொலைத்தொடர்பு சேவை திட்டத்துக்கான கட்டணங்கள் ஒரேநேரத்தில் இந்த அளவுக்கு உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடபோன் ஐடியாவும் கட்டணங்களை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.