மீண்டும் வலுக்கும் ‘நீட்’ விவகாரம் முதல் மக்களவை முடக்கம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> நீட் தேர்வுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: “மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்” என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

> நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: பாஜக எதிர்ப்பு: பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன் கூறும்போது, “தமிழக முதல்வர் இன்று நீட் தேர்வு வேண்டாம் என்று மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். எம்பிபிஎஸ் படிக்க ஒரு கோடி, முதுகலை படிப்புக்கு ஐந்து கோடி வரை செலவாகும். நரேந்திர மோடி அரசாங்கம் சுலபமாக ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் நீட் தேர்வை வைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என மீண்டும் மீண்டும் பேரவையில் தீர்மானம் போட்டு அனுப்புகிறார்கள்.

நீட் தேர்வில் இந்த ஆண்டு சில முறைகேடுகள் நடந்துள்ளது. அது தொடர்பாக மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இருந்தும் நீட் தேர்வு வேண்டாம் என்று பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆனால், நீட் தேர்வு வேண்டும் என்று சொல்லி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்" என்றார்.

> வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்குக: இபிஎஸ்-“இந்த ஆண்டு நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000-ஐ உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும். குறுவை சாகுபடி செய்து, நீரின்றி பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர்க் காப்பீடு நிவாரணம் பெற்றுத் தரவேண்டும்” என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்படாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

> “தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை” - விஜய் பேச்சு - “தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை. அது அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை” என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய விஜய், "நமது தமிழகத்தில் உலகத் தரத்திலான மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அதிகமாகவே உள்ளனர். நமக்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், அது நல்ல தலைவர்கள். அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை.

ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனை தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன். அதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்" என்றார்.

மேலும், “தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது” என்று அவர் கூறினார்.

> கள்ளக்குறிச்சி சம்பவம்: ஆளுநரிடம் பிரேமலதா மனு: கள்ளகுறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறும்போது, “ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது” என்று குற்றாம்சாட்டினார்.

> டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு: தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கின. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.

இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். டெர்மினல் 1 பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதம் தான் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. இதனை வைத்து மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக முழுமையடையாத டெர்மினல் 1 பகுதியை, பிரதமர் மோடி, அவசரமாக திறந்து வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “இந்தச் சம்பவத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். பிரதமர் மோடி திறந்து வைத்த கட்டிடம் மறுபுறம் உள்ளது. இப்போது இடிந்து விழுந்த கட்டிடம் பழைய கட்டிடம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது 2009-ல் திறக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

> ‘நீட்’ எதிர்ப்புக் குரலால் முடங்கிய மக்களவை!: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் ‘மைக் அணைப்பு’ சர்ச்சை வலுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், "நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி இன்னும் மவுனம் காத்துவரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இளைஞர்களின் நலன்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். என்றாலும் இதுபோன்ற தீவிரமான விஷயங்கள் குறித்து பேசும்போது நாடாளுமன்றத்தில் மைக்குகளை ஆஃப் செய்து இளைஞர்களின் குரல்களை ஒடுக்கும் சதி நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

> ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை: நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சிறையில் இருந்து விடுதலையான அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

> சென்னை, தஞ்சை, திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: “சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பில், மறு கட்டுமானம் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனிடையே, மாநகராட்சியாக தரம் உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தொகை, ஆண்டு வருமானத்தை குறைத்து திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

> இறுதிப் போட்டியில் இந்திய அணி!: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி இருந்தனர். பேட்டிங்கில் ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் மிகச் சிறப்பாக பங்களித்தனர்.