“வெளியேற்றம் நடக்காது என நம்புகிறோம்...” - மக்களவை சபாநாயகரிடம் ராகுல், அகிலேஷ் எதிர்பார்ப்பு


புதுடெல்லி: அரசுக்கு எதிரான கருத்துகளை உடையவைர்கள் இல்லாமல் அவையை நடத்தும் எண்ணம் ஜனநாயக தன்மையற்றது என்று ராகுல் காந்தியும், எதிர்க்கட்சி எம்.பி.க்களை வெளியேற்றும் நடவடிக்கை இனி நடக்காது என்று நம்புவதாக அகிலேஷ் யாதவும் தெரிவித்தனர். மக்களவை சபாநாயகராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசியபோது அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

மக்களவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசியது: “அவையில் எங்கள் குரல் ஒலிக்கவும், நாங்கள் பேசவும், இந்திய மக்களின் குரலினை பிரதிநிதித்துவப்படுத்தவும் எங்களை நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த அவை எவ்வளவு சிறப்பாக நடைபெறப்போகிறது என்பதை விட, எந்த அளவுக்கு இந்தியாவின் குரல் அவையில் ஒலிக்கப் போகிறது என்பதே முக்கியமானது.

எதிர்க்கட்சிகளின் குரல்களை முடக்கிவிட்டு அவையை வெற்றிகரமாக நடத்துவது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. எதிர்க்கட்சிகள் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய மக்கள் விரும்புகிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் காட்டியுள்ளது” என்று ராகுல் காந்தி பேசினார்.

ராகுலைப் போலவே இண்டியா கூட்டணிக் கட்சியின் எம்.பி.யான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "எனது சார்பாகவும், எனது சகாக்கள் சார்பாகவும் உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வகிக்கும் பதவியில் புகழ்மிக்க மரபுகள் இணைந்துள்ளன. எந்த பாகுபாடுமின்றி அவை மீண்டும் தொடரும் என்றும், மக்களவை சபாநாயகராக அனைத்து உறுப்பினர்களுக்கும், கட்சிகளுக்கும் நீங்கள் சமமான வாய்ப்புகளை வழங்குவீர்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

பாரபட்சமற்றத் தன்மைதான் நீங்கள் வகிக்கும் பதவியின் மிகப் பெரிய பொறுப்பாகும். எந்த ஒரு மக்கள்பிரதிநிதிகளின் குரல்களும் நசுக்கப்படாது. வெளியேற்றம் போன்ற நடவடிக்கைகள் இனி நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம். உங்களின் கட்டுப்பாடு எதிர்க்கட்சிகளின் மீதுதான் என்ற போதிலும் அவை ஆளுங்கட்சியின் பக்கமும் இருக்கவேண்டும்.

இந்த அவை உங்களின் உத்தரவுப்படியே நடக்கவேண்டும் அன்றி வேறு வழிமுறைகளில் இல்லை. உங்களின் நியாயமான முடிவுகளுக்கு நாங்கள் துணை நிற்போம். ஆளுங்கட்சியினரை மதிப்பது போல எதிர்க்கட்சிகளையும் மதித்து அவர்களின் பக்கத்தினையும் முன்னிறுத்த வேண்டும்" என்றார்.

அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் அணி) எம்.பி., சுப்ரியா சுலேவும் எம்.பி.கள் வெளியேற்றப்பட்டது குறித்து அவையில் நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், "நிறைய விஷயங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள். ஆனாலும் எங்களின் சகாக்கள் 150 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டபோது நாங்கள் மிகவும் வேதனையடைந்தோம். எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இடைநீக்கம் பற்றி சிந்திக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். நாங்கள் எப்போதும் விவாதத்துக்கு தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

18-வது மக்களவைக்கான புதிய சபாநாயகருக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. தேசிய. ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டார். இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கே.சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். காலையில் நடந்த தேர்தலில் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஓம் பிர்லா இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.