ஜாமீனுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றத்தை நாடிய கேஜ்ரிவால்


புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவினை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் 20-ம் தேதி இரவு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்தமனுவில் மறு உத்தரவு வரும் வரை ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கினை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், "ஜாமீன் உத்தரவினை நிறுத்தி வைப்பதில் உயர் நீதிமன்றம் கடைபிடித்த விதம் இந்த நீதிமன்றம் வகுத்துள்ள சட்ட விதிகளுக்கு முரணானது. மேலும் நமது நாட்டில் ஜாமீன் நீதித்துறை முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை வரம்புகளை மீறுவதாக உள்ளது.

மனுதாரர் ஒரு அரசியல்வாதி என்பதாலும் தற்போது மத்தியில் இருக்கும் ஆட்சியை எதிர்ப்பவர் என்பதாலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு உரிய சட்ட நடைமுறைகளை மறுக்கவோ, அவருக்கு எதிராக பொய் வழக்குகளை போடவோ முடியாது.

நீதியை மறுத்துள்ள இந்த தடையுத்தரவால் மனுதாரர் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளார். இனியும் இந்த நிலை தொடரக்கூடாது. ஒருநாள் கூட சுதந்திரத்தைப் பறிப்பது அதிகமான ஒன்று என்று இந்த நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக புதிய மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனிடையே பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் கேஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.