அசாம் வெள்ளத்தால் 4 லட்சம் மக்கள் பாதிப்பு: 1.71 லட்சம் பேர் இடம்பெயர்வு


குவாகாத்தி: அசாம் வெள்ளத்தால் இந்தாண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் காரணமாக 19 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் வெள்ளம் காரணமாக 1,71,000 அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், வெறும் 15,160 பேர் மட்டுமே தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில அரசு 17 மாவட்டங்களில் 245 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது, அதிகமான முகாம்கள் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த மே மாதத்தின் இறுதியில் ரீமெல் புயல் காரணமாக அசாம் மாநிலம் அதன் முதல் வெள்ளத் தாக்குதலைச் சந்தித்தது. இரண்டாவது வெள்ள பாதிப்பு கடந்த வாரத்தில் தொடங்கிய பருவமழையின் காரணமாக உண்டானது. ஜூன் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை அசாம் மாநிலம் 422.2 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பொழிந்துள்ளது. இது இயல்பை விட 51 சதவீதம் அதிகமாகும். இதனிடையே வெள்ளிக்கிழமை நிலைமை கொஞ்சம் சீராகியது.

பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் கூற்றுப்படி, பராக், குஷியாரா மற்றும் கோபிலி ஆகிய மூன்று பெரிய ஆறுகள் அதன் அபாய அளவைத் தாண்டி பாய்ந்துகொண்டிருக்கிறது. கம்ருப், தமுல்புர், ஹைலாகண்டி, உடல்குரி, ஹோஜை, துப்ரி, பார்பேடா, பிஸ்வநாத், நல்பரி, போன்கைகான், பாக்சா, கரீம்கஞ்ச், தெற்கு சால்மாரா, கோல்பாரா, டர்ராங், பாஜலி, நாகான், கசார் மற்றும் கம்ருப்(எம்) உள்ளிட்ட 19 மாவட்டங்கள் தற்போது வெள்ளபாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

இவைகளில் கரீம்கஞ்ச் மாவட்டம் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது. வெள்ளிக்கிழமை வரை அங்கு 2,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் குறைந்தது 7 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்துள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பார்பேடாவில் 10 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "நான்கு மைனர்கள் உட்பட மற்ற பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர். ஒரு மாணவன் மட்டும் காணாமல் போயிருந்தான். தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் வெள்ளிக்கிழமை சிறுவனின் உடலை மீட்டனர்" என்று தெரிவித்தனர்.