அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்


அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரிவிந்த் கேஜ்ரிவாலுக்கு பெரும் பின்னடைவாக விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

தற்போது கைவிடப்பட்டுள்ள புதிய மதுபான கொள்கையில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த ஜாமீன் உத்தரவினை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவிந்தர் துடேஜா அடங்கிய விடுமுறைகால அமர்வு விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீனை இடைநிறுத்தி உத்தரவிட்டனர். அப்போது, "இந்த வழக்கினை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை அந்த உத்தரவினை நிறுத்துங்கள். இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வரை விசாரணை நீதிமன்றத்தில் (ரோஸ் அவென்யூ) வழக்கு தொடர்பாக எந்த நடைமுறையும் தொடங்கப்பட கூடாது" என உத்தரவிட்டனர்.

விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, அமலாக்கத்துறைக்கு அதன் வாதத்தினை எடுத்துவைக்க நியாயமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது வாதத்தில் அவர், "எங்களின் எதிர்ப்பினை பதிவு செய்வதற்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை. விடுமுறைகால நீதிபதி முன்பு எனது வாதம் குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் வாதிடுவதற்கோ எழுத்துவப்பூர்வமான பதிலைத் தாக்கல் செய்வதற்கோ போதிய அவகாசம் தரப்படவில்லை. இது நியாயமில்லை" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 45-ஐ சுட்டிக்காட்டி ஜாமீன் உத்தரவினை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும், இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுதரி ஆஜரானார்.

முன்னதாக, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, அந்த வழக்கில் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவினை 48 மணி நேரத்துக்கு இடைநிறுத்த வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் வேண்டுகோளினை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.