பிஹாரில் 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து: பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பு


பாட்னா: பிஹாரில் 65 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையை அந்த மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டில் பிஹாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டுநவம்பரில் பிஹார் சட்டப்பேரவையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 18 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 16 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 13 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் பழங்குடி மக்களுக்கான ஒரு சதவீத இடஒதுக்கீடு, 2 சதவீதமாகவும்உயர்த்தப்பட்டது. அதோடு பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

பிஹாரில் அரசுப் பணி, கல்விசேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டதை எதிர்த்து கவுரவ் குமார் உட்பட 10 பேர் கடந்த ஆண்டு டிசம்பரில் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

தலைமை நீதிபதி கே.வி.சந்திரன், நீதிபதி ஹரிஷ்குமார் அமர்வுஒரே வழக்காக விசாரணை நடத்தியது. மனுதாரர்கள் முன்வைத்த வாதத்தில், “பிஹாரில் சட்டவிரோதமாக 50 சதவீத இடஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.இதனால் பொது பிரிவினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

பிஹார் அரசு தரப்பு முன்வைத்த வாதத்தில், “பல ஆண்டுகளாக இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமுதாயமக்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இந்த சமுதாயங்களை சேர்ந்த பெரும்பாலான குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.6,000 ஆகவே உள்ளது. உண்மையான களநிலவரத்தின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிசமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்தசூழலில் தலைமை நீதிபதி கே.வி.சந்திரன், நீதிபதி ஹரிஷ்குமார் அமர்வு நேற்று தீர்ப்பினை வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:

இந்திரா சகானி வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில், மொத்தஇடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒரு சமூகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வரம்பை நிர்ணயிக்கக்கூடாது. கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சட்டவிதிகளை பின்பற்றி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

எனவே பிஹார் அரசின் 65 சதவீதஇடஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம்.இதுதொடர்பாக பிஹார் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, பிஹார் இடஒதுக்கீடு திருத்தச் சட்டம் (எஸ்சி, எஸ்டி, ஓபிசி), பிஹார் கல்வி நிறுவன சேர்க்கை இடஒதுக்கீடு திருத்தச் சட்டம் ஆகிய இரு சட்டங்களையும் ரத்து செய்கிறோம்.

இவ்வாறு உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது